பக்கம் எண் :
 
சுவாமிநாதம்35எழுத்ததிகாரம்
 

     மொழியை ஆராய்வோர் அம்மொழியிலுள்ள மெய்ம் மயக்கங்களை
மட்டும் கண்டு கொள்வது மிக எளிய செயலாகும். ஆனால் அவற்றிடையே
அமைந்துள்ள ஒழுங்கு முறையைக் கண்டு அவற்றைப் பொதுமைப்படுத்திச்
சொல்லுதலே அரிய செயலாகவும் இலக்கண ஆசிரியரின் கடமையாகவும்
இன்று மொழியியலார் கருதுகின்றனர். மேலும் ஒழுங்குமுறையைப்
பொதுமைப்படுத்தும் போது சிலசமயங்களில் மொழியில் வராத ஆனால்
வருவதற்கு வாய்ப்பு அதிகம் பெற்ற மெய்ம்மயக்கங்களைச் சேர்த்து
மொழியின் இலக்கணமாகக் கூறிவிடலாம். அவ்வாறு வருவதற்கு வாய்ப்பு
இருந்தும் வராதவற்றைத் தற்செயல் விடுப்பு (Accidental gap) என்று கூறி
அவற்றை இலக்கணத்தில் சேர்த்துக் கூறலாம் என்று கொள்வர் மொழியியலார்.
ஆனால் மொழியின் அமைப்புக்கு முற்றிலும் மாறுபட்டதெனக் கருதத்தக்க
மெய்ம் மயக்கங்களையும் பிறவற்றையும் மொழி அமைப்பிலே இயல்பான
குறையாக வருவதால் அமைப்பு விடுப்பு (Structural gap) என்று கூறி
அவற்றை ஒதுக்கிவிட வேண்டும் என்பர் மொழியியலார். அம்முறையில்
தொல்காப்பியரும் ஏனைய தமிழ் இலக்கண ஆசிரியர்களும் கூறியவற்றில்
உதாரணம் கிடைக்காத மெய்ம் மயக்கங்களைத் தமிழ்மொழியில் வருவதற்கு
வாய்ப்பான மெய்ம்மயக்கங்கள் என்று கருதியும் அதனால் இலக்கணத்தில்
பொதுமைப் படுத்த வாய்ப்பு உள்ளது என்று கொண்டும் கூறியிருக்கவேண்டும்.

     ணகர மெய்யை எடுத்துக் கொண்டால் அது ககரத்தோடும் எண்கு
என்றும் பகரத்தோடும் பண்பு என்றும் வரும் போது சகரத்தோடு மட்டும்
தனிமொழியில் அமையவில்லை. அவ்வாறு வராதது தற்செயல் விடுப்பாகவே
கருதி அதையும் இலக்கண ஆசிரியர்கள் சேர்த்துள்ளனர். ஆனால் ணகரம்
தகரத்தோடு வராதது (ண்த்) அமைப்பு விடுப்பு என்பதால் அதை யாரும்
கூறவில்லை.

     பா. வி.: 3-வது வரி ‘உவ இவனவாஞ்’ என்ற மூலபாடம் ‘உவ இயைய
ஒளவாம்’ என்று திருத்தப்பட்டுள்ளது.