இ - ள்: குற்றெழுத்திற்கு ஒரு மாத்திரை; நெட்டெழுத்திற்கு
இரண்டு மாத்திரை; அளபெடைக்கு மூன்று மாத்திரை; மகரக்குறுக்கத்திற்கும்
ஆய்தக்குறுக்கத்திற்கும் ஒரோவொன்று கான்மாத்திரை; ஏறிய உயிரின்
மாத்திரையே உயிர்மெய்க்கும் மாத்திரை என வறிக; ஒற்றிற்கும்,
ஆய்தத்திற்கும், குற்றியலிகரத்திற்கும், குற்றியலுகரத்திற்கும் ஒரோவொன்று
அரைமாத்திரை; ஐகாரக்குறுக்கத்திற்கும் ஒளகாரக் குறுக்கத்திற்கும்
ஒரோவொன்று ஒன்றரை மாத்திரை எனக் கொள்க.
‘பெறுமுயிர'் என்றதனால் ஒற்றளபெழுந்தால் இரண்டொற்றுமாக ஒரு
மாத்திரை பெறும். அளபெழாதவழி இரண்டொற்றுக்கூடி நிற்பினும் மாத்திரை
பெறா. என்னை?
ஒற்றள பெழாவழிப் பெற்றவல கிலவே.
என்பவாகலின். ஐகாரம் ஒரு மாத்திரையுமாம்,
குறுமை யெழுத்தி னளவேயை கார
நெடுமையி னீங்கியக் கால்.
என்பவாகலின். மாத்திரைக்களவு,
கண்ணிமை கைந்நொடி யவ்வே மாத்திரை
நுண்ணிதி னுணர்ந்தோர் கண்ட வாறே.
தொ. நூன். 7
.
என்பவாகலின். அதன் பகுப்பு எவ்வாறெனில்,
உன்னல் காலே யூன்ற லரையே
முறுக்கன் முக்கால் விடுத்த லொன்றே.
எனக் கண்டுகொள்க. ஒன்றரை அறிவது எற்றாலோ? எனிற் கட என்புழி
டகர அகரம் ஒரு மாத்திரை ஆயவாறும், கடா எனபுழி டகர ஆகாரம்
இரண்டு மாத்திரை ஆயவாறும், கடை என்புழி டகர ஐகாரம் ஒரு
மாத்திரையில் ஏறி இரண்டு மாத்திரையிற் குறைந்தவாறும் கண்டுகொள்க.
அவற்றுள், ஒழிந்தனவும் இவ்வாறே ஒட்டிக்கொள்க.
(5)
|