எ - ன்: வழுவமைக்கின்றது உணர்த்துதல் நுதலிற்று.
இ - ள்: உயர்திணைப் பாற்குப் பொது, ஒருவர் இருவர் என்றல்.
அது பிரிதலாவது ஒருவன் ஒருத்தி என்றல். அது பொதுப் பிரிந்தபொழுது,
ஒருமை மாத்திரமே யல்லது எண்ணோடாது; எனவே, பொதுப் பிரியாது
நின்ற பொழுது, எவ்வளவும் எண்ணோடும் எனக் கொள்க. பொதுத்
தொழிலை யுடையவற்றை ஒன்றன் தொழிலாற் சொல்லா தொழிக. ஒரு
பொருட்குப் பல பெயர் உண்டானவிடத்துத் தொழில் கொடுக்கும்பொழுது,
அப்பெயர்களை எல்லாம் எண்ணி ஒரு தொழிலாற் சொல்லுவது.
பெயர்த்தோறும் வேறு தொழில் கொடுக்கிற் பொருளும் வேறுபட்டதாம்;
ஆதலால் ஆகாது எ-று.
அவை வருமாறு: ஒருவன் என நின்ற பின்பு, இருவன், மூவன்
எனலாகாது. ஒருத்தி என நின்றபின்பு, இருத்தி முத்தி எனலாகாது. இது
பொதுப் பிரிந்த சொல்லாதலால், ஒருமைக்கண்ணே எண்ணோடினவாறு
கண்டுகொள்க. ஒருவர் என நின்றவிடத்து இருவர் மூவர் நால்வர் என்று
எங்கும் ஒட்டிக்கொள்க. என்னை?
ஒருமை எண்ணின் பொதுப்பிரி
பாற்சொல்
ஒருமைக் கல்லது எண்ணுமுறை நில்லா
(தொல். கிளவி. 44)
என்றாராகலின். இது 1 பொதுப் பிரியாத சொல்லாதலால் எவ்வளவும்
எண்ணோடினபடி கண்டுகொள்க.
பொதுத் தொழில் என்றது ஆகுபெயர். பலபெயர்ப் பொதுத்தொழில்
உடையனவற்றை ஒன்றன் றொழிலாற் சொல்லார்; எனவே எல்லாப்
பெயர்களையுஞ் சொல்லிப் பொதுத் தொழிலாலே முடித்தல்; பொதுப்
பெயரைச் சொல்லிப் பொதுத் தொழிலாலே முடித்தல் செய்வது. அவை
வருமாறு: முடியுங் கடகமும் குழையும் நெடுநாணும் அணிந்தார். இது
எல்லாப் பேர்களையும் எண்ணிப் பொதுத் தொழிலான் முடிந்தவாறு
கண்டுகொள்க. அணிகலம் அணிந்தார், இயமரம் இயம்பினார், அடிசில்
அயின்றார் என்று சொல்வன பொதுப்பெயரைச் சொல்லிப் பொதுத்
தொழிலாலே முடிந்தவாறு. என்னை?
வேறுவினைப் பொதுச்சொல்
ஒருவினை கிளவார்.
(தொல். கிளவி. 46)
------------------------
1. இது என்றது ஒருவர் என்பதனை.
|