பக்கம் எண் :
 
64நேமி நாதம்

     எ - ன்:  செய்யுளிடத்தும் வழக்கிடத்தும் பண்புச்சொற்பெயர்
பெறுமாறும், அடைச்சொற் பெயர்பெறுமாறும் உணர்த்துதல் நுதலிற்று.

     
இ - ள்: சொற்கட்குப் பண்பு கொடுக்கும்பொழுது செய்யுளிடத்து
இனமின்றியே பண்பு கொண்டு வரப்பெறும். வழக்கினிடத்து இனமுண்டாய்ப்
பண்பு கொண்டு வரப் பெறும். அடையும் சினையும் முதலும் பற்றி இவ்
வடைவே வருஞ் சொற்கள் வண்ணச் சினைச்சொல் என்று பெயராம் எ-று.

      அவை வருமாறு: ‘செஞ்ஞாயிற்றுக் கவினை' என்றும், ‘வெண்

கோட்டியானை' 1 என்றும், ‘நெடுவெண் டிங்கள்' என்றும் இவை இனமின்றிப்
பண்பு முதலிய கொண்டு செய்யுளிடத்து வந்தன.

      செய்ய தேவன் என்றும், நெடிய கூத்தன் என்றும், சிறு நாதன்
என்றும் இனமுண்டாய்ப் பண்பு கொண்டு வழக்கிடத்து வந்தன.

      குறுஞ்சூலி, நெடுந்தடி என்பனவும், பெருவண்ணான் என்பதும்
இனமின்றிப் பண்பு கொண்டு வழக்கிடத்து வந்தன எனின்; அறியாது
கூறினாய்; பண்புகொள் பெயரல்ல, குறுமையைப் பிரித்தாற் சூலி என்றும்,
நெடுமையைப் பிரித்தாற் றடி என்றும் பெயர் ஆகாமையின் சிறப்பினாற்
பெருவண்ணான் என்றாயிற்று. இவை இனஞ்சுட்டி வந்தனவல்ல என்றறிக.

      செங்கால் நாரை, செங்கால் அன்னம், செங்கண் வரால், நெட்டிலைத்
தெங்கு, நெட்டிலை இருப்பை, தடமருப் பெருமை, தடங்கோட் டியானை,
பெருந்தோண் மன்னவன் என்பன வண்ணச் சினைச் சொல். என்னை?

    
  அடைசினை முதலென முறைமூன்று மயங்காமை
       நடைபெற் றியலும் வண்ணச் சினைச்சொல் 

                                                                                                         (தொல். கிளவி. 26)


      அடை என்பது பண்பு. பண்பு எனினும், குணம் எனினும், விசேடம்
எனினும் ஒக்கும். இவை குணம் இரண்டடுக்கி முதலொடும் வரும்
வழக்கினுள்;  செய்யுளுட் குண மிரண்டடு்க்கிச் சினையொடு வரவும் பெறும்.
அவை சிறுகருஞ் சாத்தன், இது வழக்கு. சிறு பைந்தூவி இது செய்யுள்.
என்னை?
---------------------------
1. நற்றிணை செய். 10, அடி 7.