இ - ள்:
தொடர்மொழி என்பது மூன்றெழுத்து முதலாய்க் கிடந்த
மொழி என்று அறிக. என்னை?
ஓரெழுத் தொருமொழி யீரெழுத் தொருமொழி
யிரண்டிறந் திசைக்குந் தொடர்மொழி
யுளப்பட
மூன்றே மொழிநிலை தோன்றிய நெறியே.
தொல். மொழிமரபு.12.
என்பவாகலின்.
வல்லொற்றுத் தொடர்மொழி, மெல்லொற்றுத் தொடர்மொழி,
இடையொற்றுத் தொடர்மொழி, ஆய்தத் தொடர்மொழி,
உயிர்த்தொடர்மொழி, நெடிற்கீழ் என்று சொல்லப்பட்ட சொற்களின் ஈற்றில்
நின்ற வல்லெழுத்தின்மேல் ஏறிய உகரம் குறுகும் என்க.
அக்குற்றுகரத்தின்பின் யகரம் வந்துழி அக்குற்றுகரம் அழிந்து இகரமாய்க்
குறுகும் என்க. மொழிக்கு மூன்று இடத்தும் வந்த ஐகார ஒளகாரங்கள்
குறுகும். ஒற்றெழுத்தின்பின் வந்த உயிர் தனி நில்லாது ஏறி முடியும்.
என்னை?
நெட்டெழுத் திம்பருந் தொடர்மொழி யீற்றுங்
குற்றிய லுகரம் வல்லா றூர்ந்தே.
தொல். மொழிமரபு.3.
எனவும் கூறினாராகலின்.1
வ - று:
சுக்கு, கொங்கு, தெள்கு, எஃகு, வரகு, நாகு என்பன
ககரம் ஊர்ந்து வந்த குற்றியலுகரம். ஒழிந்தனவும் இவ்வாறே ஒட்டிக்கொள்க.
இனிக் குற்றியலிகரம் வருமாறு:
யகரம் வருவழி யிகரங் குறுகும்
உகரக் கிளவி துவரத் தோன்றாது.
தொல். குற்.5.
என்பவாகலின்.
------------------------
‘எனவும் கூறினார் ஆகலின்' என்றிருத்தலான், ஈண்டு மற்றும் சில
சூத்திரங்கள் இருத்தல் வேண்டும் என்றும், அவை விடுபட்டன
என்றும் தோன்றுகின்றன.
|