ஏன்; உண்டேன், உண்ணாநின்றேன், உண்பேன் எனவும்; அல்;
உண்பல், தின்பல் எனவும் இவை தனித்தன்மை.
கூறுவன் என்று தனித்தன்மை சொன்னாரும் உளராலோ வெனின்;
இக்காலத்து அல்வினை, அன்னாய் நடக்கவும் பெறும்; என்னை?
1 அல்வினை அன்ஆய்த் திரியவும் பெறுமே
உ-ம். கூறுவன் 2 என்றார் அமுதசாகரர்.
(2)
படர்க்கை வினைமுற்றும் யார், ஒருவர் என்னும் சொற்களும்
41. ஆங்குரைத்த அன்ஆனும் அள்ஆளும் அர்ஆர்ப
பாங்குடைய முப்பாற் படர்க்கையாம் - தேங்குழலாய்
யார்எனுஞ்சொல் முப்பாற்கும் எய்தும் ஒருவரென்ப
தோரும் இருபாற் குரித்து.
எ - ன்: உயர்திணைப் படர்க்கை முப்பாலாமாறும், யார் என்னும
சொல்லும் ஒருவர் என்னும் சொல்லும் நடைபெறுமாறும் உணர்த்துதல்
நுதலிற்று.
இ - ள்: முன் சொல்லிப் போந்த அன், ஆன், அள், ஆள், அர்,
ஆர், ப என்னும் ஈறுடைய வினைச்சொற்கள் உயர்திணை முப்பாற்
படர்க்கைக்கும் அடைவே உரிய; யார் என்னும் சொல் அம்முப்பாற்கும்
உரித்து; ஒருவர் என்னும் சொல் ஒருவன் ஒருத்தி என்னும் இரண்டு பாற்கும்
உரித்து எ-று.
அவை வருமாறு: அன்: உண்டனன், உண்ணாநின்றனன், உண்குவன்;
ஆன்: உண்டான், உண்ணாநின்றான், உண்பான்; கரியன், செய்யன்,
கரியான், செய்யான் எனவும் அன்னும் ஆனும் ஒருவன் படர்க்கையாயின.
இனி, அள்: உண்டனள், உண்ணாநின்றனள், உண்குவள்; ஆள்;
உண்டாள், உண்ணாநின்றாள், உண்பாள்; கரியள் செய்யள், கரியாள்
செய்யாள் எனவும் அள்ஆள் ஒருத்திப் படர்க்கையாயின.
------------------------
1. அல் ஈற்று வினை எதிர்காலத்தில் மாத்திரமே வரும்; அன்
ஈற்று வினை முக்காலத்தினும் வரும்; ஆதலின், அதனை அல் ஈற்றின்
திரிபு எனல் ஏற்புடையதாகாது.
2. யாப்பருங்கலக் காரிகை, தற்சிறப்புப் பாயிரம். 1.
|