பக்கம் எண் :
 
அறுவகையிலக்கணம்173
பிள்ளையாரை முருகு எனச் சொல்லலும், மொய்த்த கூந்தலை உடைய பெண்ணை மொய்குழல் என உரைத்தலும், இவை போல்வன பிறவும் பலரால் அன்மொழி என்று கூறப்படும். எனினும் அச்சொற்களின் பொருளை முன்னும் பின்னும் உள்ள சொற்கள் விளக்குகின்ற சிறப்பால் (அச்சொல் அப்பொருளைத் தரும்போது, அவ்விரு மொழிகளின் சார்பினால் திரிவு பெற்றது (பொருள் மாற்றம் பெற்றது) எனக் கொண்டு (அது பயிலப்பட்ட) இடத்திற்கேற்றவாறு ஆகுபெயர், முன்மொழிச் சார்பு, பின்மொழிச்சார்பு எனத் தனித்தனியாகக் கூறுங்கொள்கையே எமக்கு உடம்பாடானது என்றவாறு.
ஆல் என்ற சொல் ஆலமர் செல்வனை உணர்த்தினால் அது முதலில் ஆல நீழலை உணர்த்திப் பின் அங்குள்ள இறைவனுக்கு ஆகி வந்ததால் இருமடி இடவாகுபெயர் எனப்படும். முருகு என்பது அதனை உடையவனுக்கு ஆகி வந்தால் பண்பாகு பெயராம். அடர்ந்த கூந்தல் எனப் பொருள்தரும் மொய்குழல் என்ற சொற்றொடர் அதனை உடையாளொரு பெண்ணை உணர்த்தும்போது அன்மொழித்தொகை எனப்படும். இவர் ஆகுபெயர், அன்மொழி என்ற இந்த இரண்டினையும் அன்மொழி, என்றே கொள்வோரை மறுக்கிறார்.
அன்மொழித்தொகை இலக்கண ஆசிரியர்களால் முன்மொழி நிலையல், பின்மொழி நிலையல் என இரண்டாகப் பகுக்கப்படும். எடுத்துக் கொண்ட சொற்றொடரில் பொருள் கோளிற்கு முன்மொழி துணை செய்யின் அது முன்மொழி நிலையல் எனப்படும். அதுவே போலப் பின்மொழியில் பொருள் கோளுக்கேற்ற சிறப்பு நிலைபெற்றிருப்பது பின்மொழி நிலையல் ஆகும். “நால்வாய் அடக்கினான்” என்புழி யானை என்ற பொருள்கோளுக்கு நாலுதல் என்னும் முன்மொழியே சிறந்த தாதலின் இது முன்மொழி நிலையல் ஆகும். இவ்வாறே பொற்றொடி வந்தாள் என்பதில் தொடியே மங்கையை அறியத் துணை செய்தலின் அது பின்மொழி நிலையலாம். இத்தகைய பாகுபாட்டை இவ்வாசிரியரும் வேண்டுகிறார்.