பக்கம் எண் :
 
அறுவகையிலக்கணம்275
சிலர் பன்னிரண்டடிக்குத் குறைந்த அடிகளை உடையது பஃறொடை என்றும், அதனின் மிக்கது கலிவெண்பா எனவும் கூறுவர், “அப்படி அடி ஈறாது வரும் பஃறொடை வெண்பாவே”, “பல அடியாய் அளவு இலவாய் ஒரூஉஎதுகை இரண்டாம் பாதங்கள் தொறும் பெறினும் வெள்ளடி குன்றாவாம் கலிவெண்பா”1 என்பது அவர் கருத்து. இவர் இப்பிரிவினையை வேண்டுவதில்லை. “பாதம் பலவரின் பஃறொடை வெண்பா”2 என்னும் யாப்பருங்கல நெறியை இவர் கடைப்பிடிக்கிறார்.
கந்தர் கலிவெண்பா, திருவிளையாடற் கலிவெண்பா, உலா, தூது, காதல் போன்ற சிற்றிலக்கியங்கள் யாவும் இந்த யாப்பிற்கு எடுத்துக்காட்டுகளாகும்.
(420)
22.இன்னும் சிற்சில வெண்பா உளஎன்று
 உரைப்பினும் இவ்விதம் ஐந்துள் உறுமே.
வெண்பாக்களை மேலும் பலவாறாகப் பாகுபடுத்திக் காட்டினாலும் அவையாவும் இங்குக் குறிக்கப் பெற்ற (குறள், சவலை, நேரிசை, இன்னிசை, பஃறொடை என்னும்) ஐந்து வகைகளுள் அடங்கும் என்றவாறு,
நேரிசை, இன்னிசை வெண்பாக்களின் முதல் குறளின் ஈற்றுச் சீரில் இணைந்த அசைகளைக் கொண்டு ஓராசு இடையிட்டவை, ஈராசு இடையிட்டவை எனப்பகுப்பர். எதுகை அமைப்பைக்கொண்டு ஒரு விகற்பம், இரு விகற்பம், பல விகற்பம் என்பர், மூன்றடியான் வருவனவற்றைச் சிந்தியல் வெண்பா என்பர், அவற்றையும் தனிச்சொல் நோக்கி நேரிசை, இன்னிசை என இரு கூறாக்குவர். பஃறொடை, கலிவெண்பாக்கள் வேறுபாடு முன்பே கூறப்பட்டது.
இவை மட்டுமன்றி அமுதசாகரம் எழுத்தெண்ணிக்கையின் அடிப்படையில் வெண்பாவை ஐந்து வகையாகப் பகுக்கிறது