பக்கம் எண் :
 
யாப்பிலக்கணம்282
2. இசைத்தமிழ்
அம்மானை
29.இரண்டு நாலுஐந்து எனும்அடி ஈற்றில்
 தன்பெயர் குலவத் தக்கஅம் மானை
 ஐந்தடிக் கலிப்பாப் போலும்; அதனிடை
 சொல்லலும் மறுத்தலும் விடையும் தானே
 கூறினர் பற்பலர் குவலயத் திடத்தே.
அம்மானை தன் இரண்டு, நான்கு, ஐந்து என்னும் மூன்றடிகளின் ஈற்றிலும் அம்மானை என்ற சொல்லையே பெற்று வரும், இது ஐந்தடிகளை உடைய கலிப்பாவைப் போன்றது. அம்மானை ஒருவர் ஒரு செய்தியைக் கூறல், மற்றொருவர் அதனை மறுத்தல், மூன்றாமவர் இரண்டிற்கும் பொருந்துமாறு பதில் கூறுதல் என்ற முறையிலேயே பலராலும் பாடப்பட்டு வருகிறது என்றவாறு,
இதனை அம்மானையாடுகின்ற மூன்று பெண்கள் தமக்குள் விவாதித்துக் கொள்வதாகக் கூறுவர். அம்மானை என்பது மூன்று, ஐந்து, ஏழு, ஒன்பது என்ற எண்ணிக்கையிலமைந்த எலுமிச்சம்பழம் போன்ற காய்களை எறிந்து அவை கீழே விழாமல் பிடித்து விளையாடும் ஒரு மகளிர் விளையாட்டு.
இவர் அம்மானையின் யாப்பை ஐந்தடிக் கலிப்பாப் போலும் என்கிறார். பிறர் ஈற்றடி மற்ற மூவடிகளை விட இருமடங்கு வந்ததாகக் கொண்டு ஈற்றடி மிக்குவந்த கலித்தாழிசை என்பர். பொதுவாக அம்மானைப் பாடல்களில் முதல் நான்கடிகளே எதுகை பெற்று வருவதாலும் ஐந்தாவது நான்காம் அடிக்கு மோனை பெற்று அதன் மறுபாதியாகவே அமைவதாலும் அதனை ஈற்றடி மிக்குவந்த கலித்தாழிசை எனலே பொருத்தமதாகத் தோன்றுகிறது.
அம்மானைக்கு எடுத்துக்காட்டு வருமாறு:-
சுந்தரஞ்சேர் தென்குடந்தை சோமநா தப்பெருமான்
சுந்தரிட மாமிதனைக் கைபிடித்தார் அம்மானை!