பக்கம் எண் :
 
அறுவகையிலக்கணம்525
இப்பிரிவும் பத்து நூற்பாக்களால் ஆயது.
124,தன்எதிர் நிலவிய புலவன்நற் றமிழ்நடை
 அன்னவன் இரட்டை ஆசிரி யத்தால்
 துலங்கும் எனவும் சொல்வார் பலரே.
தனக்கு எதிர்ப்பட்ட ஒரு கவிஞன் எந்த அளவிற்குத் தமிழ்மொழியைச் சிறப்பாகக் கையாள வல்லவன் என்பதை அவன் இயற்றும் இரட்டை ஆசிரிய விருத்தத்தைக் கொண்டும் அறியலாம் என்று கூறுபவர்களும் பலர் உளர் என்றவாறு.
இந்நூற்பா பிறன்கோள்கூறல். இவர் வெண்பாவையே ஒரு கவிஞனின் ஆற்றலைச் சரியாக அளக்கும் கருவி என வேண்டுவார். இதனை “இளமைப் புலவோர்க்கு இசையாது இகலி முதியோர் சிலர்க்கு முன்னும்முன் உதவல் வெண்பாப் போலும் வேறு ஒன்று இன்றே”1 எனத் தெளிவாகக் கூறியுள்ளார்,
“ஐந்துயிர்க் காயொடும் ஐந்துயிர் விளத்தொடும் ஐந்திடத்தே ஐந்தினோ டிரண்டுபெறு காய்கனிச் சீரோடும் ஆகுமன்றே”2 என இலக்கணம் பெற்ற அறுசீர் விருத்தத்தை இரட்டித்துப் பாடும் ஆசிரியவிருத்தம் இரட்டையாசிரிய விருத்தம் எனப்படும். ஐந்து மாத்திரை கொண்ட சீர்கள் ஐந்தும் ஏழு மாத்திரைச் சீர் ஒன்றும் இணைந்து அரையடி ஆவது இந்த யாப்பு, புலவனின் நடைவளத்தை இது நன்கு விளக்கும் என்ற கருத்தால்தான் மிகப் பெரும்பாலான சீட்டுக்கவிகள் இந்த யாப்பில் எழுந்தனபோலும்,
தமிழ் இலக்கிய உலகிற்குத் தெரிந்தும் - சற்றும் பெயரளவில் கூடத் தெரியாமலும்-அழிந்துபட்ட நூல்கள் அனைத்தும் என்றாவது ஒருநாள் இறைவன் திருவருளால் வெளிப்படும் என்ற நம்பிக்கையும், எதிர்காலத்தில் பலவகையான நூல்கள் இயற்றப்படல் வேண்டும் என்ற எதிர்பார்ப்பும், பின்வரும் நூற்பாக்களால் தெரிய வருகின்றன.