பக்கம் எண் :
 
பொருளணியியல்129

சான்றவர் யாண்டும் மொழி திறம்புதல் என்பது எக்காலத்தும் இல்லாததொன்றாகும். இவ்வேதுவால் காதலர் தேர் மாலையே வரும் என்று கூறப்படுதலின் இது என்றும் அபாவமாயிற்று.

(2) இன்மையது அபாவம் என்பது இல்லாமையினது இல்லாமை.

எ-டு: 'காரார் கொடிமுல்லை நின்குழன்மேற் கைபுனைய
வாராமை யில்லை வயவேந்தர் - போர்கடந்த
வாளையேய் கண்ணி! நுதல்மேல் வரும்பசலை
நாளையே நீங்கும் நமக்கு'

இ-ள்: கார் காலத்து ஓங்கிய கொடியையுடைய முல்லையினது பூவினை நின்னுடைய கூந்தலின்கண் அலங்கரித்துச் சூட்ட வருகின்றார், வெற்றியையுடைய அரசர்; ஆகையால் போர்த் தொழில் முடித்த வாள் போன்ற கண்களையுடையாய்! உன்னுடைய நுதலின்மேல் உண்டாகிய பசலை விடியற்காலத்தே நீங்கும், ஆதலால் நமக்கு யாது குறை? எ-று.

பசலை-வெளுப்பு.

வி-ரை:இல்லாமையினது இல்லாமை ஏதுவாக ஒன்றனை அறிவது இதன் இலக்கணமாகும்.

இப்பாடற்கண் 'வாராமை யில்லை' என்பது இன்மையது அபாவ மாகும். வாராமை யில்லை எனவே வருதல் உண்டென்பது பெற்றாம். இதனால் பசலை நீங்கும் என்றலின், இன்மையது அபாவ ஏதுவாயிற்று.

(3) ஒன்றினொன்று அபாவம் என்பது ஒன்றன்கண் ஒன்றனது இல்லாமை.

எ-டு: 'பொய்ம்மை யுடன்புணரார் மேலானோர் பொய்ம்மையும்
மெய்ம்மைசூழ் மேலாரை மேவரவாம் - இம்முறையாற்
பூவலர்ந்த தாரார் பிரிந்தாற் பொலங்குழையார்
காவலர்சொற் போற்றல் கடன்.

இ-ள்: உலகத்து மேலான அறிவையுடையார் பொய்யோடு கூடுவாரல்லார், அப்பொய்யும் மெய்தழுவிய மேலான அறிவுடையாரைப் பொருந்தாவாகும்; இத்தனைமையால் பொலிவு விளங்கிய மாலையையுடைய தலைவர் பிரிந்த காலத்துப் பொற்குழையையுடைய மனையறக் கிழத்தியர்க்குக் காவற்கடன் பூண்ட தலைவர் குறித்துரைத்த பருவத்தை நோக்குதல் கடனன்றோ எ-று.

இம்முறை - இத்தன்மை. பூ - பொலிவு. அலர்தல் - விளங்கல்.

வி-ரை:ஒன்றன்கண் ஒன்று இல்லாமை ஏதுவாக வருவது இதன் இலக்கணமாகும்.

இப்பாடற்கண் பொய்மை என்ற ஒன்றன்கண் மேலானேர் புணரார் என்பதும், மேலார் எனப்படுவாரிடத்துப் பொய்மை மேவாது என்பதும் ஒன்றின் ஒன்று அபாவமாகும். இதனை ஏதுவாகக்கொண்டு, தோழிதலைவர் பிரிந்திருப்பின் அவர் கூறியவாறு வந்துவிடுவார் என்னும் சொல்லை பாதுகாத்துக்கொண்டு இருத்தலே தக்கது என வலியுறுத்தலின் இது ஒன்றினொன்றபாவமாயிற்று.