பக்கம் எண் :
 
14தண்டியலங்காரம்

காப்பியம் தமிழில் ஏதும் இல்லை . 'வழக்கத்தில் கதை சொல்லுவதுபோல ஓசை முதலிய வின்றித் தொடர் மொழிகளாக வருவனவே பாடை 'என்பர். திரு சுன்னாகம் குமரசாமிப் புலவர் அவர்கள் . பாடை - திசைச்சொல் என்பர் மாறனலங்கார வுரையாசிரியர்.

ஒருதிறப்பாட்டால் வந்த காப்பியம் நளவெண்பா , பாரத வெண்பா முதலியன . பலதிறப்பாட்டால் வந்தன பெரிய புராணம் , கம்பராமாயணம் முதலியன . உரையும் பாட்டும் விரவிவந்தன தகடூர் யாத்திரை முதலியன.

செற்றொடர் நிலைச் செய்யுள்

12. செய்யுளந் தாதி சொற்றொடர் நிலையே.

எ-ன்: சொற்றொடர்நிலைச்செய்யுள் ஆமாறு உணர்த்துதல் நுதலிற்று.

(இ-ள்) ஒரு செய்யுளின் இறுதி அடுத்த மற்றொரு செய்யுட்கு ஆதியாகத் தொடுப்பது , சொற்றொடர்நிலைச் செய்யுளாம் எ-று.

அவை கலம்பகம் முதலியன . அல்லதூஉம் , ஒரு செய்யுளுள்ளே ஓரடி யிறுதி மற்றையடிக்கு முதலாகத் தொடுப்பனவுமுள ; அவை 1முன்னர் உரைக்கப்படும்.

இவற்றிற்கு இலக்கியம் வந்துழிக் காண்க . ஈண்டுரைப்பிற் பெருகும்.

செய்யுள் நெறி

13. மெய்பெறு மரபின் விரித்த செய்யுட்கு
வைதருப் பம்மே கௌடம் என்றாங்(கு)
எய்திய நெறிதாம் இருவகைப் படுமே.

எ-ன்: மேற்கூறிய செய்யுட்களின் நெறிக்கூறுபாடு உணர்த்துதல் நுதலிற்று.

இ-ள்: பொருள் பெறும் இலக்கண நெறியான் விரித்தோதப்பட்ட செய்யுள் அனைத்திற்கும் வைதருப்பமும் கௌடமும் எனப் பொருந்திய நெறி இருவகைப்படும் எ-று.

அஃதேல் , மேற்கூறிய செய்யுளனைத்தும் 'இருவகை நெறிப்படும்' என்றமையின் , ஒன்றற்கே இருவகை நெறியும் உளவென்று கொள்ளற்க; வைதருப்ப நெறியான் வருவனவுமுள , கௌட நெறியான் வருவனவுமுள , மேற்கூறிய செய்யுளனைத்தும் எனக் கொள்க.

வி-ரை:- நெறி - பாடல்களில் சொற்களை அமைக்கும் போக்கு . இங்ஙனம் சொற்களை யமைக்கும் நெறியில் ஒவ்வொரு நாட்டாரும் ஒவ்வொரு முறையில் வேறுபடுவர் ; தத்தம் நெறியே சுவையுடையதெனவும் கூறுவர் . அந்நெறிகளில் விதர்ப்ப நாட்டாரும் கௌட நாட்டாரும் விரும்பும் நெறிகள் மட்டும் ஈண்டுக் கூறப்படுகின்றன.


1. சொல்லணியியல் - 5-ஆம் நூற்பா உரையில் காண்க.