பக்கம் எண் :
 
16தண்டியலங்காரம்

பூவாலாக்கப்பட்ட தாரினையும் மாலையினையும் உடைய மார்பினையுடையாய் ! நீ வினைகருதிப் பிரியுங்கால் இவட்கு உண்டாகிய தனிமையால் வருந்துயரம் ஆற்றுந் தன்மையளோ? இருளோடு கூடிய மாலை வந்து சேருமிடத்து எ-று.

விலங்குதல்-வளைதல் . சென்று ஓசிதல் -நெற்றிமீது ஏறி வளைதல். விலங்குதல்-விலக்குதல். முனிதல் - ஊடுதல் , மலைவு - மாறுபாடு . இலங்குதல் - விளங்குதல் . ஓ - வினா . கார் - இருள் . மாலை - அந்திப்பொழுது . கண் - இடம் . கூடுதல் - சேர்தல் .

' மலை விலங்கு தார்மாலை மார்ப ' என்பதற்குத் தாரும் , மாலையும் கிடக்கப்பட்ட பரப்பினையுடைத்தாகிய மலைபோன்ற மார்ப! எனினும் அமையும் .

இனி ' நெகிழிசை ' என்பது வல்லினம் விரவாது ஓரினத்து
எழுத்தானே நெகிழத் தொடுப்பது .

எ-டு: ' விரவலராய் வாழ்வாரை வெல்வாய் ஒழிவாய்
இரவுலவா வேலை யொலியே - வரவொழிவாய்
ஆயர்வா யேயரிவை யாருயிரை யீராவோ
ஆயர்வாய் வேயோ வழல் '

இ-ள்: தமியராய் உயிரோடு கூடி வாழ்வாரை வருத்துவாய் , வருத்தா
தொழிவாய் ; இரவின்கண்ணும் குறையாதே அரவஞ் செய்கின்ற கடலொலியே!
இவளுடைய ஆருயிரைத் தாயராயுள்ளாருடைய வாயிலுண்டாகிய வசையே
அறுக்குந் தன்மைத்தாயிருக்க , அதன் மேலும் இடைக்குல மாக்கள் வாயிலுண்டாகிய வேய்விளை யிசையும் அழலைக் கொடா நின்றது; அதனால் இப்பொழுது இவளைக் கருதி வருகின்ற வரவையொழிவாயாக என்றவாறு.

விரவலர் - பிரிந்தார் . வாழ்வார் - இருந்தார் . வெல்லுதல் - வருத்துதல் . உலத்தல் - குறைதல் . ஆயர் - தாயார் . ஈர்தல் - அறுத்தல். வேய் - குழல் . ஓ - இரக்கக் குறிப்பு.

இவ்வாறு ஓரினத்து எழுத்தால் தொடுக்கப்படுவதொரு சுவை நோக்கிக் கௌட நெறியார் விரும்புவர் . 1

வி-ரை: செறிவு - பாடலில் நெகிழ்ந்த ஓசையின்றிச் சொற்கள் ஒன்றோடொன்று இறுகச் செறிந்து வருவது .

' சிலை விலங்கு ' என்ற பாடல் , பிரிவுணர்த்திய தலைவனுக்குத் தோழி தலைவியது ஆற்றாமை கூறிச் செலவழுங்குவித்ததாம். இப்பாடலில் நெகிழ்ந்த ஓசையின்றிச் செறிவான ஓசை யமைந்திருத்தலின் செறிவாயிற்று .

' இனி . நெகிழிசை என்பது ' என்ற விடத்தில் ' இனிச் செறிவென்பது ' என்றிருப்பின் பொருத்தமாகும் . கௌட நெறியார், வல்லினம் இல்லாததாய்ப் பெரும்பாலும் ஓரினமாயும் , வந்த வெழுத்தே பின்னும் வருவதே செறிவென்பர்.


1 இதனையடுத்து , ' இஃதிரண்டு நெறியார்க்கு மொக்கும் ' என்ற வாக்கியம் சில பதிப்புக்களில் உள்ளது . ஆயினும் அது பொருந்தாது.