எ-டு: 'கயல்போலு மென்றுநின் கண்பழிப்பல் கண்ணின்
செயல்போற் பிறழுந் திறத்தாற் - கயல்புகழ்வல்
ஆரத்தா னோமருங்கு லந்தரள வாண்முறுவல்
ஈரத்தா லுள்வெதும்பும் யான்'
இ-ள்: முத்தினாற் செய்யப்பட்ட பூணால் வருந்தாநின்ற மருங்கு லினையும் அழகிய முத்தினுடைய ஒளிபோன்ற முறுவலினையு முடையாய்! உன்னுடைய குறிப்பினால் மனமழியும் யான், கயல்போலுமென்று நின் கண்ணினைப் பழிப்பன்: நின் கண்போற் பிறழுந் திறப்பாட்டாற் கயலைப் புகழ்வன் எ-று.
பிறழ்தல் - விளங்குதல். ஆரம் - முத்துவடம். அம்தரளம் - அழகிய முத்து. ஈரம் - குறிப்பு. உள் - மனம். வெதும்பல் - அழலுதல்.
வி-ரை:இது கண்ணாகிய ஒரு பொருளை அதற்கு உவமையான கயலுடன் மயக்கந் தோன்ற உவமித்துக் கூறலின் மயக்கவுவமை யாயிற்று. கண், கயல்போலுள்ளன எனப் பழித்துப் பின் அக்கயல் கண்போல் உள்ள தெனப் புகழ்தல், கண்ணாகிய அப்பொருள்மேல் எழுந்த் உள்ள மயக்கத் தாலாம். இவ்வாற்றான் கண்ணிற்கும் கயலுக்கும் ஒப்புமை உண்டு எனத் தெரிதலின் உவமையுமாயிற்று. மோகம் - மயக்கம்.
ககூ. அபூதவுவமை என்பது முன்புஇல்லதனை உவமையாக்கி உரைப்பது.
எ-டு: 'எல்லாக் கமலத் தெழிலுந் திரண்டொன்றின்
வில்லேர் புருவத்து வேனெடுங்கண் --நல்லீர்!
முகம்போலு மென்ன முறுவலித்தார் வாழும்
அகம்போலுமெங்க ளகம்'
இ-ள்: வில்லினை யொத்த புருவத்தினையும், வேல் போன்ற நெடிய கண்ணினையு முடைய நல்லீர்! உம்முடைய முகத்தினை யொக்கும் எங்கு முள்ள கமலப்பூக்களின் செவ்வியும் செறிந்தொன்றுமாயின் என, முறுவலைச் செய்தார் மருவி வாழும் இடம் போலும் எங்கள் உள்ளம் எ - று.
அஃதேல் விகார வுவமையோடு இதனிடை வேற்றுமை என்னை? எனின், விகார வுவமை யென்பது பிறரான் விகாரப் பட்டதாகக் கொண்டு அஃதொன்றற்கு உவமையாக்கி யுரைப்பது.இஃது அன்னதன் றென்க.
வி-ரை:அபூதம் - இல்லாதது. தாமரையும் அதன் எழிலும் உள்ள பொருளே. எனினும், எல்லாத் தாமரைகளின் அழகும் சேர்ந்து ஒன்றுதல் இல்பொருளாம். அவ்வழகு அனைத்தும் சேர்ந்து ஒன்றின் முகத்தை யொக்கும் எனவே இது அபூதவுவமையாயிற்று. இதனை, 'இல்பொருளுவமை'என்றும் வழங்குப
விகார வுவமையில், மதியத்திலிருந்து ஒளியையும், மலரிலிருந்து மலர்ச்சியையும் வேறுபடுத்திப் பிரமன் இப்பெண்ணின் முகத்தை அமைத்தான் எனக் கூறப்பட்டள்ளது.ஈண்டு எல்லாக் கமலங்களின்
1. 'விகாரப்பட்டதாகக் கொண்டதனை ஒன்றற்கு'என்பதும் பாடம்.