பக்கம் எண் :
 
பொருளணியியல்51

(22) கூடாவுவமை என்பது ஒரு பொருட்குக் கூடாதவதனைக் கூடுவதாகக்கொண்டு அதனை ஒன்றற்கு உவமை யாக்கி உரைப்பது.

எ-டு: சந்தனத்திற் செந்தழலுந் தண்மதியில் வெவ்விடமும்
வந்தனவே போலுமால் நும்மாற்றம்- பைந்தொடியீர்!
வாவிக் கமல மதிமுகங்கண் டேக்கறுவார்
ஆவிக் கிவையோ வரண்

இ-ள்: பைந்தொடியீர்! சந்தனத்தின்கண் செந்தழலும், குளிர்ந்த மதியினிடத்து வெவ்விய விடமும் பிறந்தாற்போலும், நும்முடைய வார்த்தைகள்; ஆனால், குளிர்ந்த வாவியிடத்துக் கமலமலரும் மதியமும் போலும் நும்முகங்கண்டு ஏக்கறுவார் ஆவிக்கு இவையோ காவல் எ-று.

வெவ்விடம்-கடியவிடம். மாற்றம்-வார்த்தை. ஆவி-உயிர். ஏக்கறல் - ஆசைப்படுதல். அரண்-காவல்.

வி-ரை:சந்தனத்தில் நெருப்பும், மதியில் விடமும் தோன்றக் கூடாதன. இவற்றைத் தோழியிடமிருந்து வந்த சொல்லிற்கு உவமை கூறினமையின் கூடாவுவமை யாயிற்று.

இதனைப் பாங்கியிற் கூட்டத்துத் தலைவியும் தோழியும் ஒருங்கிருந்த வழித் தலைவன் இரந்து பின்னிற்க, அவனைத் தோழி அகற்ற ஆற்றாத தலைவன் கூறிய கூற்றாகக் கொள்க.

(23) பொது நீங்குவமை என்பது உவமையைக் கூறி மறுத்துப் பொருள்தன்னையே உவமையாக உரைப்பது.

எ-டு: `திருமருவு தண்மதிக்குஞ் செந்தா மரையின்
விரைமலர்க்கு மேலாந் தகையால்-கருநெடுங்கண்
மானே! யிருளளகஞ் சூழ்ந்தநின் வாண்முகம்
தானே யுவமை தனக்கு'

இ-ள்: கரிய நெடிய கண்களையுடைய மானே ! குளிர்ந்த மதிக்கும், திருமருவப்பட்ட சிவந்த தாமரையினது நறு நாற்றத்தையுடைய மலருக்கும் மேலாகிய தன்மையை யுடைத்தாகலான், இருளாகிய அளகஞ் சூழ்ந்த நின் ஒளியினையுடைய முகம் தானே தனக்கு உவமையாம் எ-று.

திரு-கண்டாரால் விரும்பப்படுந்தன்மை நோக்கம்,மருவல்-உண்டாதல். தகை-தன்மை.

வி-ரை:முகத்திற்கு உவமையாயுள்ள மதி, தாமரை ஆகிய இரண்டையும் முன்னர்க் கூறி மறுத்துப், பின்பு அம்முகத்திற்கு அதுவே உவமையாதலன்றிப் பிறிதில்லை என்பதால் இது பொது நீங்குவமையாயிற்று.

உவமையை கூறி மறுத்துப் பொருளினையே கூறி முடிப்பது உண்மையுவமை. இஃது உவமையைக் கூறி மறுத்துப் பொருள்தன்னையே உவமமாக்கி யுரைப்பது. இவை தம்முள் வேற்றுமை.

(24) மாலையுவமை என்பது ஒரு பொருட்குப் பலவுவமை வந்தால். 1அவை யொன்றோடொன்று இடைவிடாது தொடர்ச்சி யுடையவாகப் புணர்த்துக் கடைக்கண் பொருள்கூட்டி முடிப்பது.


1. 'அவை யொன்றினொன் றிடைவிடாது' என்பதும் பாடம்.