பக்கம் எண் :
 
பொருளணியியல்53

இதுவரையில் தோன்றியில்லாததும் , இனித்தோன்றக் கூடாததுமாகிய நிகழ்ச்சிகள் விளைகின்ற காலத்து உளதாவது அற்புதமாம் . இதுவரையில் அறிவுக்குப் புலனாகாத வொன்று புலப்படின் அது அதிசயமாகும் .

பொருளின் குணங்களை உவமையில் ஏற்றி அற்புதந் தோன்றச் சொல்வது அற்புதவுவமையாம் . இப்பாடலில் கூறப்பட்ட பொருள் முகம் . உவமை மதி . காதில் குழை தாழ்தல் , புருவம் தாங்கல் , கண்டார் உயிருண்ணும் தோற்றமுடைய கண்ணையுடைத்தாதல் , இருண்ட கூந்தல் உடைத்தாதல் ஆகியன பொருளின் குணங்களாம் . இவற்றை உவமையாம் மதிக்கும் ஏற்றி , இத்தகைய மதியுண்டேல் இவள் முகத்திற்கு ஒப்பாம் எனக்கூறலின் இது அற்புத வுவமையாயிற்று .

அற்றேல் இத்தகைய மதியம் இல்பொருளன்றோ ? எனவே இதற்கும் , இல்பொருளுவமைக்கும் (அபூதவுவமை) விகாரவுவமைக்கும் வேற்றுமை என்னை ? எனில் , கூறுதும் . இல்பொருளுவமையிலும் , விகார வுவமையிலும் கூறப்பட்ட உவமைகள் எல்லாம் தன்னாலோ அன்றிப் பிறராலோ விகாரப் பட்டதாகக் கூறி உவமிக்கப்பட்டுள்ளன . இஃது அன்னதன்றி, பொருளின் குணங்கள் அனைத்தையும் உவமையில் ஏற்றிக் கூறப்பட்டுள்ளனவாயுள்ளன . ஆதலில் இவை தம்முள் வேறுபாடுடையனவாம் என்றறிக .

(2) சிலேடையுவமை . அஃது இருவகைப்படும் ; செம்மொழிச் சிலேடையுவமையும் , பிரிமொழிச் சிலேடையுவமையும் என .

அவற்றுள் , செம்மொழிச் சிலேடையுவமை .

எ-டு : 'செந்திருவுந் திங்களும் பூவுந் தலைசிறப்பச்
சந்தத் தொடையோ டணிதழுவிச் - செந்தமிழ்நூல்
கற்றார் புனையுங் கவிபோல் மனங்கவரும்
முற்றா முலையாள் முகம் '

இ-ள்:திருவென்றும் , திங்களென்றும் , பூவென்றும் சொல்லப்பட்ட இவற்றது பெயரை முதற்கண்ணே யுடைத்தாய் ஓசையோடு கூடிச் , சொற்கோவையோடு அலங்காரம் புணர்ந்து , பயின்றார் உளங்கவருந்தன்மை யுடைத்தாய்ச் , செந்தமிழ் நூல் கற்றாராலே சொல்லப்பட்ட கவிபோலத் , திருவினுருவத்தையுந் திங்களினுருவத்தையும் பூவையும் உச்சிமீதில் உடைத்தாய் , நிறத்தோடுங் கூடியிருந்துள்ள பூமாலையோடும் அழகு தழுவிப் பயின்றார் உள்ளங்களைக் கவரும் முகம் எ-று .

கவிமேற் செல்லுங்கால் : சந்தம் - ஓசை , தொடை - சொற் கோவை , அணி - அலங்காரம் எனவும் ; முகமேற் செல்லுங்கால் ; சந்தம் - நிறம் , தொடை - மாலை , அணி - அழகு எனவும் வரும் .

வி-ரை: இச்சிலேடையணியின் இலக்கணத்தை 75, 76 - ஆம் நுற்பாக்களில் விரிவாகக் காண்க .

சொற்கள் ஒரு பொருளன்றிப் பலபொருட்பட வருமேல் அவை சிலேடையாம் . அங்ஙனம் ஒரு சொல் ஒன்றற்கு மேற்பட்ட பொருளைத்தரும் பொழுது , ஒரே தன்மைத்தாய் நின்று பொருள்படுமேல் செம்மொழிச் சிலேடையாகும் .