பக்கம் எண் :
 
76தண்டியலங்காரம்

5. அற்புதவுருவகம்

எ-டு; 'மன்றற் குழலார் உயிர்மேல் மதன்கடவும்
தென்றற் கரிதடுக்குந் திண்கணையும்-1 மன்றலரைக்
கங்குற் கடலில் கரையேற்று நீள்புணையாம்
பொங்குநீர் நாடன் புயம்'

இ-ள்: பொலிவினையுடைய நீர்சூழ்ந்த காவிரி நாடனுடைய தோளானது, நறுநாற்றத்தையுடைய குழலினார் உயிரை அழிக்க மன்மதன் வரவிடுத்த தென்றலாகிய மதக்களிறு வராதபடி தடுத்தற்கு ஏற்ற வலிய கணையமும், அவரகளைக் கங்குலாகிய கடலின் கரையிலே சேர்க்கும் பெரிய மிதவையுமாம் எ-று.

கணையம்-யானை வராமல் தடுக்கும் மரம்.

இங்ஙனம் பி்றவும் வருவனவற்றை உருவகத்தின்பாற் சார்த்தி யுணர்க.

வி-ரை: ஒன்றனை உருவகிக்குங்கால் அற்புதம் (வியப்பு) தோன்ற உருவகிப்பது அற்புத உருவகமாகும்.

இப்பாடலில் சோழனின் தோள்களைக் கணையமாகவும், புணையமாகவும் உருவகிக்குங்கால் அற்புதம் தோன்ற உருவகித்துள்ளமையின் இது அற்புதவுருவகமாயிற்று.

உவமை வறுமாறு;-

1.தெரிதருதேற்ற உவமை

எ-டு; 'நல்லார்கண் பட்ட வறுமையின் இன்னாதே
கல்லார்கண் பட்ட திரு'

குறள்-408

வி-ரை: இன்னதற்கு இன்னது உவமையாகும், இன்னது உவமையாகாது எனத் தெரிந்து கூறுவது தெரிதருதேற்ற வுவமையாகும்.

இ-ள்: கல்லாதவர் மாட்டுளதாய செல்வம், கற்றார் மாட்டுளதாய வறுமையினும் கொடிது என்பதாம்.

'தத்தம் நிலையினன்றி மாறி நிற்றலால் தாம் இடுக்கட் படுதலும், உலகிற்குத் துன்பஞ் செய்தலும் இரண்டற்கும் ஒக்குமாயினும், திரு கல்லாரைக் கெடுக்க,வறுமை நல்லாரைக் கெடாது நிற்றலான், வறுமையினும் திரு இன்னாது என்றார்.' (பரிமேல் - உரை)

இதன்கண் கல்லாதவர் மாட்டுளதாய செல்வத்திற்குக் கற்றாரிடத் துளதாய வறுமை உவமை கூறுத்தக்கதன்று எனத் தெரிந்து கூறியிருத்தலின், இது தெரிதருதேற்ற உவமை யாயிற்று.

முன்னர்க் (பக்-45) கூறிய தெரிதருதேற்ற வுவமைக்கும் இதற்கும் உள்ள வேறுபாடு;- முன்னர்கூறியது முதற்கண் ஐயுற்றுப் பின்பு தெளிந்து கூறுவது. ஈண்டுக்கூறியது ஐயுறாமலேயே தெளிந்து கூறுவதாம்.

2. 2பலபொருளுவமை

எ-டு; 'அடிநோக்கின். ஆழ்கடல் வண்ணன் அவன்தன்
படிநோக்கிற் பைங்கொன்றைத் தாரான் - முடிநோக்கித்
தேர்வளவ னாகத் தெளிந்தென்தன், சென்னிமேல்
ஆரலங்கல் தோன்றியது கண்டு'


1. 'அன்றலரை' என்பதும் பாடம்.

2 'பலவயிற் போலியுவமை' என்பதும் பாடம்.