பக்கம் எண் :
 
92தண்டியலங்காரம்

இ-ள்: நம்முடைய தலைவன் தன்னுடைய கண்களையும், மனத்தையும் கவர்ந்துகொண்ட மடவாள் விளையாடுமிடம் என்று நமக்கு அருளிச் செய்த சோலையின்கண் உண்டாகிய குளிர்ந்த நிழலைச் சேர்ந்த சூழலிடத்தைக் கைக்கொண்டு உலாவித் திரிவதொரு சோதியுருவம் அல்லது, அச்சோதியுருவின் அவயவங்களைக் காண்டற்கு அரிதாய் இருந்து; இஃது ஒர் உருவத்தன்மை இருந்தபடி எ-று.

அடையாளந் தண்ணிழல் - இன மெலிந்தது.

வி-ரை:இது தலைவன் கூறிய பொழிலகத்துச் சென்ற பாங்கன் தலைவியைக் கண்டு வியந்ததாகும்.

இப்பாடலில் பண்பாகிய சோதியைக் கண்டதல்லது, பண்பியாக அவ்வடிவத்தைக் காணவில்லை என விலக்கி இருப்பதால், இது பொருள் விலக்காயிற்று.

2. குண விலக்கு

எ-டு: 'மாதர் துவரிதழ்வாய் வந்தென் னுயிர்கவரும்.
சீத முறுவல் அறிவழிக்கும் - மீதுலவி
நீண்ட மதர்விழியென் னெஞ்சங் கிழித்துலவும்
யாண்டையதோ மென்மை யிவர்க்கு'

இ-ள்: இவருடைய அழகிய பவளம் போன்ற வாயானது, என்னுடைய உயிரை வந்து கவரா நின்றது; குளிர்ந்த நகையானது, அறிவை அழிக்கா நின்றது; காதின் மீது உலாவி மதர்த்து நீண்ட விழியானது, என்னுடைய நெஞ்சத்தைக் கிழித்து உலவா நின்றது; ஆதலால், இவர்க்கு மென்மை எங்குள்ளதோ சொல்லுவாயாக எ-று.

யாண்டையதோ - எவ்விடத்ததோ.

வி-ரை:இது தலைவன், தலைவி வருத்திய வண்ணம் உரைத்தலாகும்.

இப்பாடலில் தலைவியாகிய பண்பியை விலக்காது, அவட்குளதான
பண்பாகிய மென்மைத் தன்மையை விலக்கி யிருப்பாதல், இது குண
விலக்காயிற்று.

3. காரண விலக்கு

எ-டு: ' மதரரிக் கண்சிவப்ப வார்புருவங் கோட
அதரந் துடிப்ப வணிசேர் - நுதல்வியர்ப்ப
நின்பால் நிகழ்வனகண் டஞ்சாதால் என்நெஞ்சம்
என்பால் தவறின்மை யால்.

இ-ள்: மடவாய்! செவ்வரி பரந்து மதர்த்த கண் சிவப்ப, நீண்ட புருவம் வளைய, அதரந் துடிக்க, அழகு சேர்ந்த நெற்றியானது வியர்ப்ப, உன்னிடத்தில் நிகழ்வவைற்றைக் கண்டு என்னுடைய நெஞ்சம் பயப்பட மாட்டாது, என்னிடத்தில் குற்றம் இல்லாமையால் எ-று.

கோட - வளைய. அணி - அழகு. பால் - இடம்.

வி-ரை:இது தலைமகளின் ஊடல் கண்ட தலைவன் அவளிடம் கூறியதாகும்.