பக்கம் எண் :
 
98தண்டியலங்காரம்

' இப்போது இவளும் இசைகின்றாள் ' என்பதால் உடன்பாடு தோன்றக் கூறினும் , 'மாலை இருளோ நிலவோ எழும், அப்போது அடுப்ப தறியேன் ' என்பதால் பிரியின் இறப்பள் எனக் கூறித் தலைவனுடைய செலவை விலக்கலின் , இது உடன்படல் விலக்காயிற்று .

(11) வெகுளி விலக்கு என்பது வெகுளிதோன்றக் கூறி விலக்குவது .

எ-டு : 'வண்ணங் கருக வளைசரிய வாய்புலர
எண்ணந் 1தளர்வே மெதிர்நின்று - கண்ணின்றிப்
போதல் புரிந்து பொருட்காதல் செய்வீரால்
யாதும் பயமிலேம் யாம் '

இ-ள்: இவளுடைய நிறங் கருகி வேறுபடவும் , கையில் வளையானது சிந்தவும் , வாயானது நீரற்று உலரவும் , நன்மை எய்துவதாக நாங்கள் எண்ணிய எண்ணமெல்லாம் பழுதாகவும் எங்கள் எதிரே நின்று கண்ணோட்டமின்றிப் பிரிதல் விரும்பி எங்களை வெறுத்துப் பொருளை ஆசைப் படுவீரானால் , இனி எங்களுக்கு ஒரு பயனுமில்லை எ-று .

வி-ரை: இதுவுமது , நும்முடைய பிரிவால் வண்ணமும் , வளையும் , எண்ணமும் தளரும் எம்மைக் கண்டும் பொருள்வயிற் பிரிய வேண்டும் என்பீராயின் எமக்கு யாதும் பயமில்லை என வெகுளி தோன்றக் கூறி , பிரிதலை நினையவே இங்ஙனம் தளரும் யாம் , பிரிந்தால் இறந்தே படுவோம் என்பதைக் குறிப்பால் அறிவுறுத்து விலக்கலின் , இது வெகுளி விலக்காயிற்று .

(12) இரங்கல் விலக்கு என்பது இரக்கந்தோன்றக் கூறி விலக்குவது .

எ-டு : 'ஊசல் தொழிலிழக்கும் ஒப்பு மயிலிழக்கும்
வாசஞ் சுனையிழக்கும் வள்ளலே ! - தேசு
பொழிலிழக்கும் நாளையெம் பூங்குழலி நீங்க
எழிலிழக்கும் அந்தோ இவண் '

இ-ள்: எம்முடைய பூவினால் அலங்கரிக்கப்பட்ட குழலினை யுடைய இவள் உயிர் இழப்பதே யன்றி , ஆடுகின்ற ஊசல்களும் விளையாடல் தொழிலை யிழக்கும் ; மயிலும் உவமையை யிழக்கும் ; சுனைகளும் நறு நாற்றத்தை யிழக்கும் ; பொழிலும் ஒளியை யிழக்கும் ; இவ்விடமும் அழகை யிழக்கும் ; தலைவனே ! இனி அடுத்தவாறு செய் எ-று .

வி-ரை: இதுவுமது , நீ பிரியின் ஊசலும் , மயிலும் , சுனையும் , பொழிலும் இவ்விடமும் தத்தம் தன்மையை இழந்துவிடும் என இரங்கல் தோன்றக் கூறி , இவ்வாற்றான் நீ பிரியாமையே இவை தத்தம் தன்மையுடன் இருப்பதற்கு ஏதுவாம் எனத் தலைவனுடைய செலவை விலக்கலின் இது இரங்கல் விலக்காயிற்று .

(13) ஐய விலக்கு என்பது ஐயுற்றதனை விலக்குவது .


1. 'தளரவெதிர் நின்று' என்பதும் பாடம் .