பக்கம் எண் :
 
இறையனார் அகப்பொருள் - கற்பு 161
 

நிறையிலனாய்ப் பிரிந்தான் அல்லன்; என்னை, தலைமகளின் நீங்கி
ஆடல்காண்பல் பாடல்கேட்பல் எனப் பிரியும்; பிரிய, அவற்றின்கட் சென்ற
உணர்ச்சி தலைமகள்மாட்டு நின்ற உணர்வினை மறைக்கும்; என்னை,
இரண்டுணர்வு உடனில்லாமையின்;  அவ்வகை மறைப்ப இவர்கண்ணதே
உள்ளமாம் என்பது; என்னை, தாம் இயல்பாகவேயும் பிறரான் நயக்கப்படும்
வனப்புடையார், ஆடற்றகையானும் பாடற் குரலானும் நயப்பித்துக்கொள்வம்
என்று எடுத்துக்கொண்டால், ஆடவர்கள் அவர்கண் நயப்புச்
சொல்லவேண்டுமோ என்பது, அவற்றது பொருள் அறியாது கடாயினாய்,
இஃது அவற்றுப் பொருளென்று கொள்க என்பது.

      இனிப் பிரிவுகளை வேறு வேறு உரிமை கூறுமிடத்து அவற்றுக்குச்
செய்யுள் காட்டுதும்.                                            (2)

                      
சூத்திரம்-36

     அவற்றுள்
     ஓதலும் காவலும் உயர்ந்தோர்க் குரிய
.

என்பது என்னுதலிற்றோ எனின், மேற் சொல்லப்பட்ட பிரிவினை
நிறுத்தமுறையானே முன்பு இரண்டும் இன்னார்க்கு உரிய என்பது
உணர்த்துதல் நுதலிற்று.

      இதன் பொருள்: அவற்றுள் என்பது-மேற் சொல்லப்பட்ட அறுவகைப்
பிரிவினுள்ளும் என்றவாறு; ஓதலும் காவலும் என்பது-ஓதற்குப் பிரியும்
பிரிவும் நாடுகாத்தற்குப் பிரியும் பிரிவும் என்றவாறு; உயர்ந்தோர்க்கு உரிய
என்பது-உயர்ந்தோர் என்பார் பார்ப்பாரும் அரசரும், அவ்விருவர்க்கும்
உரிய என்றவாறு.

      ஓதற்குப் பிரியும் பார்ப்பான், நாடுகாத்தற்குப் பிரியும் அரசன் என
நிரனிறையாகக் கொள்க. அது பொருந்தாது; என்னை, ஓதலும் காவலும்
அந்தணர் அரசர் என்று இருவர்க்கும் உரியவெனினும் நிரனிறையாவது
என்றார்க்கு, அவ்வாறு சொல்லிற்றிலராயினும் பொருள்வகையான் நோக்க
ஒக்கும் என்பது. என்னை, உயர்ந்தோர்க்கு உரிய எனவே, உயர்ந்தோராவார்
பார்ப்பாரும் அரசருமே யாகலான் என்பது. என்றார்க்கு, உயர்ந்தோர்க்கு
உரிய என்றதனாற் பார்ப்பார்க்கே உரிய என்று கொள்ளாமோ எனின்,
கொள்ளப்படாது; காவல் பார்ப்பார் தொழிலன்று, ஆகலின் இருவர்க்கும்
உரிய என்பது