பக்கம் எண் :
 
இறையனார் அகப்பொருள் - கற்பு 193
 

சூத்திரம்-53


     எல்லா வாயிலும் கிழவோன் பிரிவயின்
     பல்லாற் றானும் வன்புறை குறித்தன்று.

என்பது என்னுதலிற்றோ எனின், பிரிவிடை ஆற்றாளாய தலைமகளை
வாயில்கள் ஆற்றுவிக்குமாறு உணர்த்துதல் நுதலிற்று.

    இதன் பொருள்: எல்லா வாயிலும் என்பது-தலைமகனும் விருந்தும்
ஒழிந்து எல்லா வாயில்களும்; (தோழியும் பார்ப்பானும் பாணனும் பாடினியும்
என இவர்கள்) கிழவோன் பிரிவயின் - தலைமகன் நாடிடையிட்டும்
காடிடையிட்டும் பிரியும் பிரிவின்கண்; பல ஆற்றானும் வன்புறை
குறித்தன்று - பலநெறியானும் ஆற்றுவித்தலைக் கருதின என்றவாறு.

   என்பது, பருவம் குறிக்கப்பட்ட தலைமகள் பருவவரவின்கண்,
ஆற்றாளாய்க், ‘கார்ப்பருவம் வரும்வழி அவர் பாணிப்பாரல்லர், வந்தார்,
வாராநின்றார், வருவர்’ எனவும், ‘இதனைப் பருவமன்றென்றும் பழித்து,
அதனைப் பருவமே எனக் கருதினாயேயெனில் அவராற் குறிக்கப்பட்ட
பருவமன்று; என்னை, அவர் பொய்யுரை உரையார் ஆகலான்; யாம்
தெளியேம்’ எனவும், காலங் காட்டியும், சொகினஞ்1 சொல்லியும், யாழ்
பண்ணியும் எல்லாத்திறத்தானும் தலைமகளை ஆற்றுவிக்கும் என்பது. இனி
தலைமகன்றன்னை, ‘அன்பிலன் கொடியன்’ எனவும் இத்தொடக்கத்தன
எல்லாஞ் சொல்லியும் ஆற்றுவிக்கும்.

     அவற்றுட் பருவ வரவின்கண் ஆற்றாளாய தலைமகளை
ஆற்றுவித்தற்குப் படைத்து மொழிந்து பருவமன்று என்றதற்குச் செய்யுள்:


பருவமன்றென்றல்


   ‘கடாவும் நெடுந்தேர்க் கலிமத னன்கலி தேயச்செங்கோல்
   நடாவும் நகைமுத்த வெண்குடை வேந்தன்நண் ணார்மதில்பாய்ந்
   திடாவும் மதமா மழைபெய்யும் ஓதை என முழங்கப்
   பிடாவும் மலர்வன கண்டே மெலிவதென் பெண்ணங்கே.’     (301)

   ‘விடக்கொன்று வைவேல் விசாரிதன் மற்றிவ் வியலிடம்போய்
   நடக்கின்ற செங்கோல் ஒருகுடை வேந்தன்நண் ணார்முனைபோல்
   கடக்குன்றஞ் சென்றநம் காதலர் பொய்யலர் நையல்பொன்னே
   மடக்கொன்றை வம்பினைக் காரென எண்ணி மலர்ந்தனவே.’  (302)

  1. சொகினம் - விருச்சி; நிமித்தம்.