|
அஃதே கருத்து, அறிந்திலை; தன்னானே உரைக்கப்பட்டது. எனினும்,
பிறவற்றை யெல்லாம் திரியவும் திரியாமையும் கொண்டார் இதனைத்
திரியாமையே கொண்டார் எல்லாரும் என்றற்கு அவ்வாறு உரைக்கப்பட்டது
தன் மதம் உணர்ந்தாரையும் புலவர் என்றான், அறிபொருளுக்கு ஏனோரும்
புலவராகலின்.
இனி என்மனார் என்பது, ‘என்ப’ என்னும் முற்றுச்சொல்,
‘குறைக்கும்வழிக்
குறைத்தல்’
(எச்சவியல் - 7)
என்பதனாற் பகரம் குறைத்து,
‘விரிக்கும்வழி
விரித்தல்’
(எச்சவியல் - 7)
என்பதனால், ‘மன், ஆர்’ என்பன இரண்டு இடைச்சொற்பெய்து விரித்து,
‘என்மனார்’ என்று ஆயிற்று.
‘என்மனார்’ என்பது ‘புலவர்’ என்னும் பெயர்கொண்டு முடிந்தது,
முற்றுச்சொல் எச்சப்பெயர்கொண்டு முடியும் ஆகலின் என்பது. (1)
சூத்திரம் - 2
அதுவே
தானே அவளே தமியர் காணக்
காமப் புணர்ச்சி இருவயின் ஒத்தல்.
என்பது என்னுதலிற்றோ எனின், மேற் கந்தருவ வழக்கத்தோடு ஒக்கும்
ஒழுக்கம் களவு என்று வேண்டிற் றல்லது, இன்ன இலக்கணத்தது
என்றிலாதார், அதனை உணர்த்துதல் நுதலிற்று; இச்சூத்திரத்துட் கருதிய
பொருள் மேலதனோடு இயையும்.
இதன் பொருள்: அதுவே என்பது-பண்டறி சுட்டு, மேற்சொல்லப்பட்ட
கந்தருவ வழக்கம்போலுங் களவு என்றவாறு; தானே அவளே என்பது-தானே
அவள், அவளே தான்; என்பது என் சொல்லியவாறோ? எனின், ‘‘தான்
அவள்’’ என்னும் வேற்றுமை யிலர் என்றவாறு;
இங்ஙனம் வாசகம் வேறுபடச் சொல்லப்பட்டாராயினும்,
அன்பினானும் குணத்தினானும் கல்வியினானும் உருவினானும் திருவினானும்
திரிபிலர் ஒருவரோடொருவர் என்பதாம். அஃது
|