பாவைபோல மனம் உருகிப் பசந்து காட்டினாள். காட்டியும் ஆற்றினாள்,
‘யான் ஆற்றாவிடின் எம்பெருமானும் இறந்துபடும்’ என. அங்ஙனம்
ஆற்றினாளது நீர்மையைக் கண்டு, ‘இவள் எவ்விடத்தும் தன் தன்மை
என்பது ஒன்று இலள், என் தன்மையளே போலும்’ எனப் பெரியதோர்
கழியுவகை மீதூர நின்று, வன்புறை என்பதோர் சொற்சொல்லும்.
வன்புறை
வன்புறை என்பது வற்புறுத்துவது. அஃதியாங்ஙனமோ எனின்,
அணித்து எம் இடம் என்பது. அதற்குச் செய்யுள்;
‘பாவணை யின்தமிழ் வேந்தன் பராங்குசன்
பாழிவென்ற
ஏவணை வெஞ்சிலை யான்வஞ்சி யன்னாய் இனையலெம்மூர்த்
தூவண மாடச் சுடர்தோய் நெடுங்கொடி துன்னி நும்மூர்
ஆவண வீதியெல் லாநிழற் பாய்நின் றணவருமே’
(13)
‘திணிநிற நீள்தோள் அரசுகத் தென்னறை
யாற்றுமின்னார்
துணிநிற வேல்கொண்ட கோன்தொண்டி யன்னாய் துயரலெம்மூர்
மணிநிற மாடத்து மாட்டிய வான்சுடர் மாலைநும்மூர்
அணிநிற மாளிகை மேற்பகல் பாரித் தணவருமே’
(14)
‘ஒன்றக் கருதா வயவர் நறையாற்
றுடனழிந்து
பொன்றப் படைதொட்ட கோன்புன னாடனை யாய்நுமர்கள்
குன்றத் திடைபுனங் காவல ரிட்ட குரூஉச்சுடரெம்
மன்றத் திடையிருள் நீக்கும் படித்தெங்கள் வாழ்பதியே’
(15)
‘சேலங் குளர்வயற்சேவூ ரெதிர்நின்ற
சேரலனை
மாலங் கடைவித்த மன்னன் வரோதயன் வஞ்சியன்ன
ஏலங் கமழ்குழ லேழையெம் மூரெழின் மாடத்துச்சிச்
சூலந் துடக்குநும் மூர்மணி மாடத் துகிற்கொடியே’
(16)
என, அங்ஙனங் கேட்ட தலைமகள், ‘எம்பெருமான் அணித்து எம் இடம்
என்கின்றானால், அணியதற்கு அருமையில்லை என்கின்றானாம்.
அருமையில்லை என்றதனாற் போந்த பொருள், பல்காலுங் கேட்கவும்
காணவுமாம் என்றவாறு போலும். பல்காலுங் கேட்பாருங் காண்பாரும்
ஆற்றியுளர் ஆகாதே; அதனால் எம்பெருமான், என்னைக் காண்டற்கும்
கேட்டற்கும் ஆற்றியுளனாம் போலும்’ என, ஆற்றுவாளாம். அங்ஙனம்
ஆற்றுதலை அறிந்த பின்றைப் பிரிவானாம்.
இனி, ‘இவளும் பெருநாணினள்; யான் பிரியாதுவிட இவ்வொழுக்கம்
புறத்தார்க்குப் புலனாம். ஆகவே, இவள் ஒருதலையாக இறந்துபடும்’ என,
இவ்வகை பிரிவச்சமும்
|