பக்கம் எண் :
 
96இறையனார் அகப்பொருள்

வெறியாட்டு வலத்தினானும் எம்பெருமானை வெறிக்களத்துக்
கொண்டுவருங்கொல்லோ’ என்னும் பேரச்சத்தினானும், ‘எம்பெருமானை அவ்
வெறிக்களத்துக் கொண்டுவருகல்லாது என் கண் நின்ற வேறுபாட்டைப்
புறத்தார்க்குப் புலனாகாமை மறைப்பது கொல்லோ எனவும், அங்ஙனம்
மறைக்க அதனைக் கேட்டு, எம்பெருமான், என்னினாகிய வேறுபாடு
பிறிதொன்றினானும் நீங்கும்போலும்’ என்று உட்கொள்ளுமெனவும்
தலைமகள் ஆற்றாளாம் என்று தோழி ஆற்றாளாம்.

       ஆற்றாளாயினாளது ஆற்றாமை ஆற்றுவதொன்றினைப் பற்றும்;
என்னையெனின், ஆற்றுவது பிறிதின்மையின், ‘யாய் அறிவாரை
வினாவுமிடத்து, என்னை வினாவி, யான் அறியேன் என்றதன்புறத்தாம்
பிறரை வினாவுவது; அங்ஙனம் என்னை வினாவினவிடத்து இனி யாது
சொல்லுவேன்’ என்று கூட்டமில் நாட்டவகையாற் சிந்தித்துக்கொண்டு
இருந்தாள்; இருந்த நிலைமைக்கண், தாய் பிற்றைஞான்று சிறுகாலை
படிமக்கலத்தொடும் புக்காள், மகளை அடியிற்கொண்டு முடிகாறும் நோக்கி,
‘அன்னாய், என் மகள் பண்டையளல்லளால், இவ் வேறுபாடு
எற்றினானாயிற்று, நின்னால் அறியப்படுவதுண்டோ?’ என்னும், என்றவிடத்து
இவள் அன்றுகொண்டு என்னாலும் சிறிதுண்டு அறியப்படுவது; அஃதியாது
எனின், ‘எம்மைக் கூழைக்கற்றைக் குழவிப் பிராயத்து மாழைகலந்த
ஏழைநீர்மையாரொடு நாட்கோலஞ் செய்து, ‘‘விளையாடிவம்மின்’’ என்று
போக்கினாய்; போனவழி, யாம் போய் ஒரு வெண்மணல் பரந்த தண்மலர்ப்
பொழிலிடை விளையாடாநின்றேமாக, ஒரு தோன்றல் ஒரு சுனைக்குவளைப்
பூக்கொண்டு அவ்வழியே போந்தான்; போதர, நின்மகள் அவனை நோக்கி,
‘‘அக் குவளைப் பூவை என்பாவைக்கு அணியத் தம்மின்’’ என்றாள்;
அவனும் பிறிதொன்றுஞ் சிந்தியாது கொடுத்து நீங்கினான்; இஃது
அறியாக்காலத்து நிகழ்ந்தது’ என்னும்; அதற்குச் செய்யுள்:

                   அறத்தொடு நிற்றல்
 

  ‘கந்தார் களிறு கடாய்ச்செந் நிலத்தைக் கறுத்தெதிர்ந்து
  வந்தார் அவியவை வேல்கொண்ட கோன்கன்னி வார்துறைவாய்ப்  
  பந்தார் விரலிதன் பாவைக்கு வேண்டப்பைம் போதொருவர்
  தந்தார் தரவவை கொண்டணிந் தாளித் தடங்கண்ணியே.’    (128)

  ‘திண்போர் அரசரைச் சேவூர் அழிவித்த தென்னன்நன்னீர்
  மண்போ யளிக்குஞ்செங் கோல்மன்னன் வையைநல் நாடனையாள்
  கண்போல் குவளையம் போதங்கொர் காளைகைக் கண்டிரப்பத்
  தண்போ தவன்கொடுத் தானணிந் தாளித் தடங்கண்ணியே.’  (129)