பக்கம் எண் :
 
இறையனார் அகப்பொருள் - களவு 99
 

கண்டு அருகுநின்றார்க்கு உரைப்பாளாய் உரைக்கும்; அதற்குச் செய்யுள்:
அறிவிலன் வேலனென் றயலோர்க்குரைத்தல்

  ‘வாரணங் குங்கழல் வானவன் மாறன்வண் கூடலன்ன
  ஏரணங் கும்இள மென்முலை யாட்கிருந் தண்சிலம்பன்
  தாரணங் காதல் அறிந்தும் வெறியின்கண் தாழ்ந்தமையான்
  ஆரணங் காயினும் ஆகஇச் செவ்வேள் அறிவிலனே.’      (135)

  ‘பொன்னணங் கீர்ம்புனற் பூலந்தை யொன்னார் புலாலளைந்த
  மின்னணங் கீரிலை வேற்றென்னன் கோன்விய னாட்டவர்முன்
  தன்னணங் கன்மை யறிந்தும் வெறியின்கண் தாழ்ந்தமையான்
  மன்னணங் காயினு மாகவிச் செவ்வேள் மதியிலனே’       (136)

    ‘கடவுட் கற்சுனை அடையிறந் தவிழ்ந்த
    பறியாக் குவளை மலரொடு காந்தட்
    குருதி ஒண்பூ உருகெழக் கட்டிப்
    பெருவரை அடுக்கம் பொற்பச் சூர்மகள்
    அருவி இன்னியத் தாடு நாடன்
    மார்புதர வந்த படர்மலி அருநோய்
    நின்னணங் கன்மை அறிந்தும் அண்ணாந்து
    கார்நறுங் கடம்பின் கண்ணி சூடி
    வேலன் வேண்ட வெறிமனை வந்தோய்
    கடவுள் ஆயினும் ஆக
    மடவை மன்ற வாழிய முருகே’             (நற்றிணை, 34)

என, இவ்வாறு சொல்லக் கேட்ட தாய், ‘என் சொல்லியவாறோ’ என்னும்,
அவள் குறிப்பறிதற்கு; என்றவிடத்து, மேற்சொல்லியவாறே அறத்தொடு  
நிற்பாளாம். (14)
                     சூத்திரம்-15

       முற்படப் புணராத சொல்லின் மையிற்
       கற்பெனப் படுவது களவின் வழித்தே
.

என்பது என்நுதலிற்றோ எனின், கற்பிலக்கணம் ஆமாறு உணர்த்துதல்
நுதலிற்று.

     
இதன் பொருள்: முற்படப் புணராத சொல் இன்மையின் என்பது-
மாழிமாற்றுச் சூத்திரம், அதனைப், ‘புணராத முற்படச் சொல் இன்மையின்’
என்று மொழிமாற்றிக் கொள்க. கற்பு எனப்படுவது களவின் வழித்தே என்பது
- கற்பு என்பதற்குச் சிறப்புடையது களவின்வழித்து என்றவாறு.