பக்கம் எண் :
 
44தொன்னூல்விளக்கம்
     (இ-ள்.) இரண்டாம் வேற்றுமையிலக்கண மாமாறுணர்த்துதும். இரண்டாம்
வேற்றுமைக்கு உருபு ஐ ஒன்றேயாகும். இதற்குப்பொருள் ஆக்கல், அழித்தல்,
அடைதல், நீத்தல், ஒத்தல், உடைமை, இவைமுதலியனவாம். (உ-ம்.)
அறத்தையாக்கினான், நூலைக்கற்றான், குடத்தை வனைந்தான், கோயிலைக் கட்டினான்,
இவை ஆக்கப்படுபொருள். மரத்தைக்குறைத்தான், கயிற்றை யறுத்தான், வினையை
வென்றான், பகையைக் கொன்றான், இவை அழிக்கப்படு பொருள். தேரையூர்ந்தான்,
நாட்டை நண்ணினான், வீட்டைமேவினான், அறத்தையடைந்தான், இவை
அடையப்படுபொருள். ஆசையைத்துறந்தான், அல்லலை யொழித்தான்,
காமத்தைநீத்தான், கலனைத்துறந்தான், இவை நீக்கப்படுபொருள். பொன்னை
யொத்தான், புலியைப்போன்றான், வேளைநிகர்த்தான், வெற்பையனையான், இவை
ஒக்கப்படுபொருள். அருளையுடையான், பொருளையுடையான், அறிவையுடையான்,
பொறையையுடையான், இவை உடைமைப் பொருள். செயப்படு பொருளாவது,
கருத்தாவின் றொழிற்பயனுறுவது. வருக்கையைவளர்த்தான் என்புழி, மண்வெட்டல்,
குழிதொட்டல், விதைநடுதல், புனல்விடுதன் முதலியசெயல் கருத்தாவின்றொழிலாம்.
தளிர்த்தல், பருத்தல், பூத்தல், காய்த்தன் முதலிய காரியம் அத்தொழிலின்பயனாம்.
அப்பயனுக்கிடம் வருக்கை யாதலால், வருக்கை செயப்படு பொருளாம். அதனிலிருக்கும்
பயனுக்கிடமாகுகை செயப்படுபொருண்மையாம். வருக்கை, எ-து. பலா.
எட்டியைவெட்டினான் என்புழி, வாளால்வீசுதன் முதலியசெயல் கருத்தாவின் றொழிலாம்.
துண்டாதல், பிளவாதன் முதலியகாரியம் அத்தொழிலின் பயனாம். அப்பயனுக்கிடம்
எட்டியாதலால் எட்டிசெயப் படுபொருளாம். அதனிலிருக்கும் பயனுக்கிடமாகுகை
செயப்படு பொ ருண்மையாம். கோட்டையைக் கட்டினான் என்புழி, கால்வெட்டல், நூல்
கட்டல், சேறிடுதல், கல்லடுக்கன் முதலியசெயல் கருத்தாவின் றொழிலாம்.
மாடங்கூடமதின் மாளிகையாதன் முதலிய காரியம் அத்தொழிலின்பயனாம்.
அப்பயனுக்கிடங் கோட்டையாதலால் கோட்டை செயப்படுபொருளாம். அதனிலிருக்கும்
பயனுக்கிடமாகுகை செயப்படு பொருண்மையாம். நகரையடைந்தான் என்புழி, நடந்து
செல்லன்முதலிய செயல் கருத்தாவின் றொழிலாம். அடைதல் சேர்தன் முதலியகாரியம்
அத்தொழிலின்பயனாம். அப்பயனுக்கிடம் நகராதலால் நகர் செயப்படு பொருளாம்.
அதனிலிருக்கும் பயனுக்கிடமாகுகை செயப்படு பொருண்மையாம். நாயகியை நீக்கினான்
என்புழி, வெறுத்தல், நீக்கல், முதலியசெயல் வினை முதற்றொழிலாம்.
நீங்குதன்முதலியகாரியம் அத்தொழிலின்பயனாம், அப்பயனுக்கிட நாயகியாதலால்
நாயகிசெயப்படுபொருளாம். அவளிலிருக்கும் பயனுக்கிடமாகுகை
செயப்படுபொருண்மையாம். குடத்தைநிகர்த்தான் என்புழி, உபமானமாக்குகையாகிய
நிகர்த்தல், கருத்தாவின்றொழிலாம். அதனாலுளதாகியபயன் உபமானமாகுகை
அதற்கிடங் குடமாதலால் குடஞ்செயப்படுபொருளாம்.