தொடக்கம் | ||
களவியல்
|
||
89. | இன்பமும் பொருளும் அறனும் என்றாங்கு அன்பொடு புணர்ந்த ஐந்திணை மருங்கின், காமக் கூட்டம் காணும் காலை, மறையோர் தேஎத்து மன்றல் எட்டனுள் துறை அமை நல் யாழ்த் துணைமையோர் இயல்பே. |
உரை |
90. | ஒன்றே வேறே என்று இரு பால்வயின் ஒன்றி உயர்ந்த பாலது ஆணையின், ஒத்த கிழவனும் கிழத்தியும் காண்ப, மிக்கோன் ஆயினும், கடி வரை இன்றே. |
உரை |
91. | சிறந்துழி ஐயம் சிறந்தது' என்ப- 'இழிந்துழி இழிபே சுட்டலான. |
உரை |
92. | வண்டே, இழையே, வள்ளி, பூவே, கண்ணே, அலமரல், இமைப்பே, அச்சம், என்று அன்னவை பிறவும் ஆங்கண் நிகழ- நின்றவை களையும் கருவி' என்ப. |
உரை |
93. | நாட்டம் இரண்டும் அறிவு உடம்படுத்தற்குக் கூட்டி உரைக்கும் குறிப்புரை ஆகும். |
உரை |
94. | குறிப்பே குறித்தது கொள்ளுமாயின், ஆங்கு அவை நிகழும்' என்மனார் புலவர். |
உரை |
95. | பெருமையும் உரனும் ஆடூஉ மேன. | உரை |
96. | `அச்சமும் நாணும் மடனும் முந்துறுதல் நிச்சமும் பெண்பாற்கு உரிய' என்ப. |
உரை |
97. | வேட்கை, ஒருதலை உள்ளுதல், மெலிதல், ஆக்கம் செப்பல், நாணு வரை இறத்தல், நோக்குவ எல்லாம் அவையே போறல், மறத்தல், மயக்கம், சாக்காடு, என்று இச் சிறப்புடை மரபினவை களவு' என மொழிப. |
உரை |
98. | முன்னிலை ஆக்கல், சொல்வழிப்படுத்தல், நல் நயம் உரைத்தல், நகை நனி உறாஅ அந் நிலை அறிதல், மெலிவு விளக்குறுத்தல், தன் நிலை உரைத்தல், தெளிவு அகப்படுத்தல், என்று இன்னவை நிகழும்' என்மனார் புலவர். |
உரை |
99. | மெய் தொட்டுப் பயிறல், பொய் பாராட்டல், இடம் பெற்றுத் தழாஅல், இடையூறு கிளத்தல், நீடு நினைந்து இரங்கல், கூடுதல் உறுதல், சொல்லிய நுகர்ச்சி வல்லே பெற்றுழித் தீராத் தேற்றம் உளப்படத் தொகைஇ, பேராச் சிறப்பின் இரு-நான்கு கிளவியும்- பெற்றவழி மகிழ்ச்சியும் பிரிந்தவழிக் கலங்கலும் நிற்பவை நினைஇ நிகழ்பவை உரைப்பினும், குற்றம் காட்டிய வாயில் பெட்பினும், பெட்ட வாயில் பெற்று இரவு வலியுறுப்பினும், ஊரும் பேரும் கெடுதியும் பிறவும் நீரின் குறிப்பின் நிரம்பக் கூறித் தோழியைக் குறையுறும் பகுதியும், தோழி குறை அவட் சார்த்தி மெய்யுறக் கூறலும், தண்டாது இரப்பினும், மற்றைய வழியும், சொல் அவட் சார்தலின் புல்லிய வகையினும், அறிந்தோள் அயர்ப்பின் அவ் வழி மருங்கின் கேடும் பீடும் கூறலும், தோழி நீக்கலின் ஆகிய நிலைமையும், நோக்கி மடல்-மா கூறும் இடனுமார் உண்டே. |
உரை |
100. | பண்பின் பெயர்ப்பினும், பரிவுற்று மெலியினும், அன்புற்று நகினும், அவட் பெற்று மலியினும், ஆற்றிடை உறுதலும், அவ் வினைக்கு இயல்பே. |
உரை |
101. | 'பாங்கன் நிமித்தம் பன்னிரண்டு' என்ப. | உரை |
102. | முன்னைய மூன்றும் கைக்கிளைக் குறிப்பே. | உரை |
103. | பின்னர் நான்கும் பெருந்திணை பெறுமே. | உரை |
104. | முதலொடு புணர்ந்த யாழோர் மேன தவல் அருஞ் சிறப்பின் ஐந் நிலம் பெறுமே |
உரை |
105. | இரு வகைக் குறி பிழைப்பு ஆகிய இடத்தும்; காணா வகையின் பொழுது நனி இகப்பினும்; தான் அகம் புகாஅன் பெயர்தல் இன்மையின், காட்சி ஆசையின் களம் புக்குக் கலங்கி, வேட்கையின் மயங்கிக் கையறு பொழுதினும் ; புகாக் காலைப் புக்கு எதிர்ப்பட்டுழி, பகாஅ விருந்தின் பகுதிக்கண்ணும் ; வேளாண் எதிரும் விருப்பின்கண்ணும் ; தாளாண் எதிரும் பிரிவினானும் ; நாணு நெஞ்சு அலைப்ப விடுத்தற்கண்ணும் ; வரைதல் வேண்டித் தோழி செப்பிய புரை தீர் கிளவி புல்லிய எதிரும் , வரைவு உடன்படுதலும் ; ஆங்கு அதன் புறத்துப் புரை பட வந்த மறுத்தலொடு தொகைஇ , கிழவோள் மேன' என்மனார் புலவர். |
உரை |
106. | காமத் திணையின் கண் நின்று வரூஉம் நாணும் மடனும் பெண்மைய ஆகலின், குறிப்பினும் இடத்தினும் அல்லது, வேட்கை நெறிப்பட வாரா, அவள்வயினான. |
உரை |
107. | காமம் சொல்லா நாட்டம் இன்மையின் ஏமுற இரண்டும் உள' என மொழிப |
உரை |
108. | சொல் எதிர் மொழிதல் அருமைத்து ஆகலின், அல்ல கூற்றுமொழி அவளவயினான. |
உரை |
109. | மறைந்து அவற் காண்டல், தற் காட்டுறுதல், நிறைந்த காதலின் சொல் எதிர் மழுங்கல், வழிபாடு மறுத்தல், மறுத்து எதிர்கோடல், பழி தீர் முறுவல் சிறிதே தோற்றல், கைப்பட்டுக் கலங்கினும், நாணு மிக வரினும், இட்டுப் பிரிவு இரங்கினும், அருமை செய்து அயர்ப்பினும், வந்தவழி எள்ளினும், விட்டு உயிர்த்து அழுங்கினும், நொந்து தெளிவு ஒழிப்பினும், அச்சம் நீடினும், பிரிந்தவழிக் கலங்கினும், பெற்றவழி மலியினும், வரும் தொழிற்கு அருமை வாயில் கூறினும், கூறிய வாயில் கொள்ளாக் காலையும், மனைப் பட்டுக் கலங்கிச் சிதைந்தவழித் தோழிக்கு நினைத்தல் சான்ற அரு மறை உயிர்த்தலும், உயிராக் காலத்து உயிர்த்தலும், உயிர் செல வேற்று வரைவு வரின் அது மாற்றுதற்கண்ணும், நெறி படு நாட்டத்து நிகழ்ந்தவை மறைப்பினும், பொறியின் யாத்த புணர்ச்சி நோக்கி ஒருமைக் கேண்மையின் உறு குறை தெளிந்தோள் அருமை சான்ற நால்-இரண்டு வகையின் பெருமை சான்ற இயல்பின்கண்ணும், பொய் தலை அடுத்த மடலின்கண்ணும், கையறு தோழி கண்ணீர் துடைப்பினும், வெறியாட்டு இடத்து வெருவின்கண்ணும், குறியின் ஒப்புமை மருடற்கண்ணும், வரைவு தலைவரினும், களவு அறிவுறினும், தமர் தற் காத்த காரண மருங்கினும், தன் குறி தள்ளிய தெருளாக் காலை வந்தவன் பெயர்ந்த வறுங் களம் நோக்கித் தன் பிழைப்பாகத் தழீஇத் தேறலும், வழு இன்று நிலைஇய இயற்படு பொருளினும், பொழுதும் ஆறும் புரைவது அன்மையின் அழிவுதலை வந்த சிந்தைக் கண்ணும் காமஞ் சிறப்பினும் அவன் அளி சிறப்பினும் ஏமஞ் சான்ற உவகைக் கண்ணும் தன்வயின் உரிமையும் அவன்வயிற் பரத்தையும் அன்னவும் உளவே ஓரிடத் தான. |
உரை |
110. | வரைவிடை வைத்த காலத்து வருந்தினும், வரையா நாளிடை வந்தோன் முட்டினும், 'உரை' எனத் தோழிக்கு உரைத்தற்கண்ணும், தானே கூறும் காலமும் உளவே. |
உரை |
111. | உயிரினும் சிறந்தன்று நாணே; நாணினும் செயிர் தீர் காட்சிக் கற்புச் சிறந்தன்று' எனத் தொல்லோர் கிளவி புல்லிய நெஞ்சமொடு காமக் கிழவன் உள்வழிப் படினும், தா இல் நல் மொழி கிழவி கிளப்பினும், ஆவகை பிறவும் தோன்றுமன் பொருளே. |
உரை |
112. | நாற்றமும், தோற்றமும், ஒழுக்கமும், உண்டியும், செய் வினை மறைப்பினும், செலவினும், பயில்வினும், புணர்ச்சி எதிர்ப்பாடு உள்ளுறுத்து வரூஉம் உணர்ச்சி ஏழினும் உணர்ந்த பின்றை, மெய்யினும் பொய்யினும் வழிநிலை பிழையாது, பல் வேறு கவர் பொருள் நாட்டத்தானும்; குறையுறற்கு கெதிரிய கிழவனை மறையுறப் பெருமையின் பெயர்ப்பினும், உலகு உரைத்து ஒழிப்பினும்; அருமையின் அகற்சியும்; 'அவள் அறிவுறுத்துப் பின் வா1 வென்றலும்; பேதைமை ஊட்டலும்; முன் உறு புணர்ச்சி முறை நிறுத்து உரைத்தலும்; அஞ்சி அச்சுறுத்தலும்; உரைத்துழிக் கூட்டமொடு எஞ்சாது கிளந்த இரு-நான்கு கிளவியும்- வந்த கிழவனை மாயம் செப்பிப் பொறுத்த காரணம் குறித்த காலையும்; புணர்ந்தபின் அவன்வயின் வணங்கற்கண்ணும்; குறைந்து அவட் படரினும்; மறைந்தவள் அருக, தன்னொடும் அவளொடும் முதல் மூன்று அளைஇ, பின்னிலை நிகழும் பல் வேறு மருங்கினும்; நல் நயம் பெற்றுழி நயம் புரி இடத்தினும்; எண்ண அரும் பல் நகை கண்ணிய வகையினும்; புணர்ச்சி வேண்டினும்; வேண்டாப் பிரிவினும்; வேளாண் பெரு நெறி வேண்டிய இடத்தினும்; புணர்ந்துழி உணர்ந்த அறி மடச் சிறப்பினும்; ஓம்படைக் கிளவிப் பாங்கின்கண்ணும்; செங் கடுமொழியான் சிதைவுடைத்துஆயினும்; என்பு நெகப் பிரிந்தோள் வழிச் சென்று கடைஇ, அன்பு தலையடுத்த வன்புறைக்கண்ணும்; ஆற்றது தீமை அறிவுறு கலக்கமும்; காப்பின் கடுமை கையற வரினும்; களனும் பொழுதும் வரை நிலை விலக்கி, காதல் மிகுதி உளப்படப் பிறவும்; நாடும் ஊரும் இல்லும் குடியும் பிறப்பும் சிறப்பும் இறப்ப நோக்கி, அவன்வயின் தோன்றிய கிளவியொடு தொகைஇ, அனை நிலை வகையான் வரைதல் வேண்டினும், ஐயச் செய்கை தாய்க்கு எதிர் மறுத்து, பொய் என மாற்றி மெய்வழிக் கொடுப்பினும்; அவள் விலங்குறினும்; களம் பெறக் காட்டினும்; பிறன் வரைவு ஆயினும்; அவன் வரைவு மறுப்பினும்; முன்னிலை அறன் எனப்படுதல் என்று இரு வகைப் புரை தீர் கிளவி தாயிடைப் புகுப்பினும்; வரைவு உடன்பட்டோர் கடாவல் வேண்டினும்; ஆங்கு அதன் தன்மையின் வன்புறை உளப்பட; பாங்குற வந்த நால்-எட்டு வகையும்- தாங்ககு அருஞ் சிறப்பின் தோழி மேன. |
உரை |
113. | களவு அலர்ஆயினும், காமம் மெய்ப்படுப்பினும், அளவு மிகத் தோன்றினும், தலைப்பெய்து காணினும், கட்டினும் கழங்கினும் வெறி என இருவரும் ஒட்டிய திறத்தான் செய்திக்கண்ணும், ஆடிய சென்றுழி அழிவு தலைவரினும், காதல் கைம்மிகக் கனவின் அரற்றலும், தோழியை வினாவலும், தெய்வம் வாழ்த்தலும், போக்கு உடன் அறிந்தபின் தோழியொடு கெழீஇக் கற்பின் ஆக்கத்து நிற்றற்கண்ணும், பிரிவின் எச்சத்தும், மகள் நெஞ்சு வலிப்பினும், இரு பால் குடிப் பொருள் இயல்பின்கண்ணும், இன்ன வகையின் பதின்மூன்று கிளவியொடு அன்னவை பிறவும்-செவிலி மேன. |
உரை |
114. | தாய்க்கும் வரையார், உணர்வு உடம்படினே. | உரை |
115. | 'கிழவோன் அறியா அறிவினள் இவள்' என, மை அறு சிறப்பின் உயர்ந்தோர்பாங்கின், ஐயக் கிளவியின் அறிதலும் உரித்தே. |
உரை |
116. | 'தன் உறு வேட்கை கிழவன் முன் கிளத்தல் எண்ணும் காலை, கிழத்திக்கு இல்லை; பிற நீர் மாக்களின் அறிய, ஆயிடைப் பெய்ந் நீர் போலும் உணர்விற்று' என்ப. |
உரை |
117. | காமக் கூட்டம் தனிமையின் பொலிதலின், தாமே தூதுவர் ஆகலும் உரித்தே. |
உரை |
118. | அவன் வரம்பு இறத்தல் அறம் தனக்கு இன்மையின், களம் சுட்டுக் கிளவி கிழவியது ஆகும்; தான் செலற்கு உரிய வழி ஆகலான. |
உரை |
119. | தோழியின் முடியும் இடனுமாருண்டே. | உரை |
120. | முந் நாள் அல்லது துணை இன்று கழியாது; அந் நாள் அகத்தும், அது வரைவு இன்றே. |
உரை |
121. | பல் நூறு வகையினும் தன் வயின் வரூஉம் நல் நய மருங்கின் நாட்டம் வேண்டலின், துணைச் சுட்டுக் கிளவி கிழவியது ஆகும், துணையோர் கருமம் ஆகலான. |
உரை |
122. | ஆய் பெருஞ் சிறப்பின் அரு மறை கிளத்தலின், தாய் எனப்படுவோள் செவிலி ஆகும். |
உரை |
123. | தோழிதானே செவிலி மகளே | உரை |
124. | சூழ்தலும் உசாத்துணை நிலைமையின் பொலிமே | உரை |
125. | குறையுற உணர்தல், முன் உற உணர்தல், இருவரும் உள்வழி அவன் வரவு உணர்தல், என மதியுடம்படுத்தல் ஒரு மூவகைத்தே. |
உரை |
126. | 'அன்ன வகையான் உணர்ந்தபின் அல்லது பின்னிலை முயற்சி பெறாள்' என மொழிப. |
உரை |
127. | முயற்சிக் காலத்து, அதற்பட நாடி, புணர்த்தல் ஆற்றலும் அவள்வயினான. |
உரை |
128. | 'குறி எனப்படுவது இரவினும் பகலினும் அறியக் கிளந்த ஆற்றது' என்ப |
உரை |
129. | இரவுக் குறியே இல்லகத்துள்ளும் மனையோர் கிளவி கேட்கும் வழியதுவே- மனையகம் புகாஅக் காலையான |
உரை |
130. | 'பகல் புணர் களனே புறன்' என மொழிப- அவள் அறிவு உணர வருவழியான |
உரை |
131. | அல்லகுறிப்படுதலும் அவள்வயின் உரித்தே, அவன் குறி மயங்கிய அமைவொடு வரினே. |
உரை |
132. | ஆங்கு, ஆங்கு ஒழுகும் ஒழுக்கமும் உண்டே, ஓங்கிய சிறப்பின் ஒரு சிறையான. |
உரை |
133. | மறைந்த ஒழுக்கத்து, ஓரையும் நாளும் துறந்த ஒழுக்கம், கிழவோற்கு இல்லை. |
உரை |
134. | ஆற்றினது அருமையும், அழிவும், அச்சமும், ஊறும் உளப்பட, அதன் ஓரன்ன. |
உரை |
135. | தந்தையும் தன்னையும் முன்னத்தின் உணர்ப | உரை |
136. | தாய் அறிவுறுதல் செவிலியொடு ஒக்கும் | உரை |
137. | அம்பலும் அலரும் களவு வெளிப்படுத்தலின் அங்கு அதன் முதல்வன் கிழவன் ஆகும் |
உரை |
138. | 'வெளிப்பட வரைதல், படாமை வரைதல், என்று ஆயிரண்டு' என்ப-'வரைதல் ஆறே' |
உரை |
139. | 'வெளிப்படைதானே கற்பினொடு ஒப்பினும், ஞாங்கர்க் கிளந்த மூன்று பொருளாக வரையாது பிரிதல் கிழவோற்கு இல்லை. |
உரை |