கொடுமையொழுக்கம் தோழிக்கு உரியவை வடுவறு சிறப்பிற் கற்பில் திரியாமைக் காத்தலும் உவத்தலும் பிரித்தலும் பெட்டலும் ஆவயின் வரூஉம் பல்வேறு நிலையினும், கொடுமை ஒழுக்கம் தோழிக்கு உரியவை-பரத்தையிற் பிரிவும் ஏனைப் பிரிவுகளும் ஆகித் தலைவன் கண் நிகழுங் கொடுமையொழுக்கத்தில் தோழி கூறுதற்கு உரியளென மேற்கூறுகின்றவற்றைக் கேட்ட வழி, வடுவறு சிறப்பிற் கற்பில் திரியாமை-எஞ்ஞான்றுங் குற்றமின்றி வருகின்ற பிறப்பு முதலிய சிறப்பிடத்துங் கற்பிடத்துந் திரிவுபடாதபடி, காய்தலும் உவத்தலும் பிரித்தலும் பெட்டலும் நிலையினும்-தோழி கூற்றினை வெகுளலும் மகிழ்தலும் அவளைப் பிரித்தலும் பின்னும் அவள் கூற்றினைக் கேட்டற்கு விரும்புதலுமாகிய நிலையின் கண்ணும் ஆவயின் வரூஉம் நிலையினும் - அத் தோழியிடத்துத் தலைவனைக் காய்தலும் உவத்தலும் பிரித்தலும் பெட்டலுமாய் வரும் நிலையின் கண்ணும், பல்வேறு நிலையினும் -இக்கூறியவாறன்றிப் பிறவாற்றாய்ப் பலவேறுபட்டுவரும் நிலையின் கண்ணும். |