“நீரார் செறுவின்” என்னும் மருதக்கலியும் (75) அது. இனிப் பல்வேறு நிலையாவன: தோழி பிரிவுணர்த்திய வழிச் செலவழுங்கக் கூறுவனவற்றின் வேறுபாடுகளும், பிரிந்துழி வழியருமை பிறர் கூறக் கேட்டுக் கூறுவனவும், தலைவனது செலவுக் குறிப்பு அறிந்து தானே கூறுவனவும், தூதுவிடக் கருதிக் கூறுவனவும், நெஞ்சினையும், பாணனையும் தூது விட்டுக் கூறுவனவும், வழியிடத்துப் புற்களை நொந்து கூறுவனவும், பிரிவிடையாற்றாளெனக் கவன்ற தோழிக்கு ஆற்றுவலெனக் கூறுவனவும், அவன் வரவு தோழி கூறிய வழி விரும்பிக் கூறுவனவும், கூறிய பருவத்தின் வாராது பின்னர் வந்தவனொடு கூடியிருந்து முன்னர்த் தன்னை வருத்திய குழலை மாலையிற் கேட்டுத் தோழிக்குக் கூறுதலும், தலைவன் தவறிலனெனக் கூறுவனவும், புதல்வனை நீங்காதொழுகிய தலைவன் நீங்கிய வழிக் கூறுவனவும், காமஞ் சாலாவிளமை யோளைக் களவின் கண் மணந்தமை அறிந்தேனெனக் கூறுவனவும், இவற்றின் வேறுபட வருவன பிறவுமாம். |