ஈண்டு ‘என்ப’ என்றது முதனூலாசிரியரையன்று1 வடநூலாரைக் கருதியது. பொய்யாவது : செய்த ஒன்றனைச் செய்திலே னென்றல், வழுவாது சொல்லுதலே அன்றி ஒழுக்கத்து இழுக்கி ஒழுகல். அஃது அரசரும் வாணிகருந் தத்தம் வகையாற் செய்யத் தகுவன செய்யாது சடங்கொப்புமை கருதித் தாமும் அந்தணரோடு தலைமை செய்தொழுகுதலுங் களவொழுக்கத்தின் இழுக்குதல் போல்வனவும் அவர்க்கிழுக்கம். ஏனை வேளாளரும் இயற்கைப் புணர்ச்சி நிகழ்ந்த பின்னர்ப் பொய்யும் வழுவுந் தோன்றி வழுவுதல் அவர்க்கிழுக்கம். இவற்றைக் கண்டு இருடிகள் மேலோர் மூவர்க்கும் வேறுவேறு சடங்கினைக் கட்டி கீழோர்க்குங் களவின்றியும், கற்பு நிகழும் எனவும் சடங்கு வேறு வேறு கட்டினர். எனவே, ஒருவர் கட்டாமல் தாமே தோன்றிய கரணம் வேத நூற்கே உளதென்பது பெற்றாம். ஆயின் கந்தருவ வழக்கத்திற்குள் சிறந்த களவு விலக்குண்ட தன்றோ எனின் ஒருவனையும் ஒருத்தியையும் எதிர்நிறீஇ ‘இவளைக் கொள்ள இயைதியோ நீ’ எனவும், ‘இவர்க்குக் கொடுப்ப இயைதியோநீ’ எனவும், இருமுதுகுரவரும் கேட்ட வழி அவர் கரந்த உள்ளத்தான் இயைந்த வழிக் கொடுப்பவாகலின் அதுதானே ஒருவகையாற் கந்தருவ வழக்கமாம். களவு ஒழுக்கம் நிகழாதாயினும் என்பது கரணம் யாத்தோர் கருத்தென்பது பெற்றாம். |