1. பொருள் : நெஞ்சமே! இறைச்சியொடு கூடிய நெய்ச்சோற்றைச் சுற்றத்தார்க்கு விருந்திட்டு, புள்ளின் சகுனம் பார்த்து, திங்களை உரோகிணி கூடிய நல்ல நேரத்தில், மனையை அலங்கரித்து, கடவுள் வாழ்த்தி, முரசமொடு சங்கு ஒலிப்பத் திருமணச் சடங்கைச் செய்த மகளிர் விரைவாகத் தம் கண்களால் நோக்கி மறையச் சுற்றத்தார் வாகையின் கவர்ந்த இலையை அறுகம் புல்லின் கிழங்கிடத்து அரும்பிய அரும்புகளுடன் சேரக்கட்டிய நூலை மணமகளுக்குச் சூட்டி ஆடையாற் பொலிவு பெறச் செய்து விருப்பம் பொருந்தச் செய்து மணவொலியுடைய பந்தரில் அவளுக்கு இழையணிந்த சிறப்போடு உண்டாய வியர்வையை மாற்றி நமக்கு ஈந்த அந்த முதல் நாள் இரவில் சிறந்த கற்புடைய நம் உயிர்க்கு உடம்பாக அடுத்த அவளை நோக்கியான், கசங்காத ஆடை உடம்புமுழுதும் போர்த்தமையால்நின் நெற்றி வியர்த்தது; அது ஆறுமாறு காற்று வீசநின்முகப் போர்வையைச் சிறிது திறப்பாயாக எனக் கூறி ஆர்வத்தால் போர்வையை விலக்கினேன்; அப்போது உறையிலிருந்து கழிக்கப்பட்ட வாள் ஒளி விடுவது போலத் தன் உடம்பு ஒளியுடன் தோன்ற உடனே மறையும் இடம் அறியாளாய் ஒய்யென நாணித் தன் கூந்தலால் மறைப்பிடங்களை மறைத்தவளாய்த் தலை கவிழ்ந்து நின்றாள். |