பக்கம் எண் :

18தொல்காப்பியம் - உரைவளம்
 
ஏமுறு கிளவி சொல்லிய எதிரும்
சென்றே தேஎத்து உழப்புநனி விளக்கி
இன்றிச் சென்ற தன்னிலை கிளப்பினும்
அருந்தொழில் முடித்த செம்மற் காலை
விருந்தொடு நல்லவை வேண்டற் கண்ணும்
மாலை யேந்திய பெண்டிரும் மக்களும்
கேளிர் ஒழுக்கத்துப் புகற்சிக் கண்ணும்
ஏனைய வாயிலோர் எதிரொடு தொகைஇப்
பண்ணமை பகுதிமுப் பதினொரு மூன்றும்
எண்ணருஞ் சிறப்பிற் கிழவோன் மேன.
(5)
 

இளம்
  

இது தலைவற்குரிய கிளவியெல்லாம் தொகுத்து உணர்த்துதல் நுதலிற்று.
  

இ-ள் : கரணத்தின்  அமைந்து   முடிந்தபின்பு  நெஞ்சுதளையவிழ்ந்த   புணர்ச்சி  முதலாக  ஏனை
வாயிலோரெதிரொடு  கூடிப்பண்ணுதல்  அமைந்த  பகுதியினையுடைய  முப்பதின் மூன்றிடத்தினும் கூறல்
எண்ணுதற்கரிய சிறப்பினையுடைய கிழவோன் மேலன என்றவாறு.
  

இடம்  என்பது  வகையிற்  கூறியவதனால்  உரைக்கப்பட்டது.  கூற்றென்பது  வருகின்ற சூத்திரத்தினும்
கொணர்ந்துரைக்கப்பட்டது
*.
  

கரணத்தினமைந்து  முடிந்த  காலை  என்பது-ஆசான்  புணர்த்த  கரணத்தினால் வதுவை முடிந்தபின்
என்றவாறு.


* சூத்திரத்தில் முப்பதின் ஒரு மூன்றும் என்று கூறப்பட்டதானது  முப்பத்து  மூன்றுதான்  என்பதின்றி
முப்பத்து    மூன்று    வகை    என்பதை   உணர்த்துமாதலின்  அவ்வகைகள்  அவை   நிகழும்
இடங்களையுணர்த்தும். அதனால் முப்பதின் ஒரு மூன்றும் என்பதற்கு முப்பத்து மூன்று இடங்களிலும்
எனப் பொருள் உரைக்கப்பட்டது.
  

முப்பத்து  மூன்றிடத்தினும் கிழவோன்மேன  என்றால்  தொடர்  ஒழுங்கில்லையாதலின்  முப்பத்து
மூன்றிடத்திலும் கூறல் என்று பொருள் கொள்ள  வேண்டுவதாயிற்று. அக்கூறல் என்பது  அடுத்துவரும்
சூத்திரத்தில் (6) கிழவோள் செப்பல் என வருவதில் செப்பல் என வருவதில்  செப்பல் (கூறல்) என்பது
இங்குக் கொணர்ந்து கூட்டியுரைக்கப்பட்டது.