1 பொருள் : செல்வ (தலைவ!) உலகத்தில் அறிவிலாதார் தாம் செய்யும் தீவினைகளைக் கண்டவர் இல்லை என்று எண்ணிச் செய்யும் தீவினைகளுள் தம் நெஞ்சறிந்த வினைகளை மறைப்பினும் அவர்தம் நெஞ்சமே சான்றாகும்; வேறு சான்றில்லையாதலின் நின்னை யான் கழறியுரைக்க வேண்டுவதில்லை. ஆயினும் அன்பில்லாதவன், கொடியன் என்று கழறுவேன்; கேள். தேமொழியின் இளமுலைகள் தோன்றா முன்பருவத்தில் அவளைக் கூடிய கூட்டத்தை அவளின் கண்கள் பனிவார்ந்து துளிக்கவும் கைவிடுவாய் நீ. அதனால் நீ கொடியை. ஒளிவளையணிந்தவள் தழையுடையுடுத்திய பருவத்தில் அவளுடன் கூடிய தொடர்பை அவள் உடம்பு மெலிந்து தனித்து அழவும் கைவிடுவாய் ஆனாய்; நீ கொடியை. சிலம்பும் சில மொழியும் உடைய தலைவியைக் கூந்தலைப் பின்னிவிடும் பருவத்தில் வந்து கூடிய உறவு நீட்டித்து வரவும் அவள் அல்குலில் நுண்ணிய வரிவாடுமாறு கைவிடுவாய்; நீ கொடியை. தலைவ! அத்தகைய வருத்தம் உடையவள் அவள் என்று எண்ணி அவட்கு அருள் செய்க நீயில்லையாயின் முன்கை வளையல் நில்லாது விழும்படியாகும். அவளது நுதலின் பசலை மறையும் நீ அவளை மணம் செய்து கொள்ளின். அறிக. |