பக்கம் எண் :

260தொல்காப்பியம் - உரைவளம்
 

பார்ப்பார் கூற்று
  

175.

காமநிலை யுரைத்தலும் தேர்நிலை யுரைத்தலும்
கிழவோன் குறிப்பினை எடுத்துக் கூறலும்
ஆவொடு பட்ட நிமித்தம் கூறலும்
செலவுறு கிளவியும் செலவழுங்கு கிளவியும்
அன்னவை பிறவும் பார்ப்பார்க் குரிய. 

(36)
 

பி.இ. நூ.
  

நம்பியகம் 190, இல.வி.468.
  

இளமையும் யாக்கையும் வளமையும் எனவும்
நிலையாத் தன்மை நிலையெடுத் துரைத்தலும்
செலவழுங்கு வித்தலும் செலவுடன் படுத்தலும்
பிறவும் எல்லாம் மறையோற் குரிய.
  

இளம்.
  

இது, பார்ப்பார்க்குரிய கிளவியுணர்த்திற்று.
 
  

(இ-ள்) : காமநிலை யுரைத்தலாவது-நீ பிரியின் இவள் காமமிகும் என்று கூறுதல்.
  

“அறனின்றி அயல்தூற்றும் அம்பலை”   

(கலித்-3)

என்பதனுள்
 

“உடையிவ ளுயிர்வாழாள் நீநீப்பின் எனப்பல
இடைகொண்டியாம் இரப்பவும் எமகொள்ளாய் ஆயினை
கடைஇய வாற்றிடை நீர்நீத்த வறுஞ்சுனை
அடையொடு வாடிய அணிமலர் தகைப்பன”
1
  

எனவரும்.
 
 

தேர்நிலை யுரைத்தலாவது-ஆராய்ச்சி நிலையாற் கூறுதல். அது வருமாறு.  


1 பொருள் :  நின்னையே  உயிராகவுடைய  இவள்  நீ  பிரியின்  உயிர்  வாழாள்  என்று  பலவாறாக
இடைநின்று யாம் இரந்து கேட்பவும் எம்சொற்களைக் கொண்டிலை. ஆனால் நீ தேர் கடவிச் செல்லும்
வழியில்   நீர்   அற்றவறிய   சுனையில்   இலைகளுடன்   வாடிய   அழகிய மலர்களே  நின்னைத்
தடுப்பனவாகும்.  (நீரற்று வாடிய மலர்கள்போல் நாமின்றி அவள் வாடும் என்னும் கருத்தை அக்காட்சி
தரும் என்பது கருத்து.)