இறையனார் அகப்பொருள் - களவு 105
 

குறியிடம் தலைவன் கொள்ளக்கூறல்


  ‘மருள்போல் சிறைவண்டு பாடநிலவன்ன வார்மணல்மேல்
  இருள்போல் கொழுநிழற் பாயறிந் தார்கட்கின் தீந்தமிழின்
  பொருள்போல் இனிதாய்ப் புகழ்மன்னன் மாறன் பொதியிலின்கோன்
  அருள்போற் 1குளிர்ந்தன்ன முந்துன்னும் நீர்த்தெங்கள் ஆடிடமே.’

  ‘காவியந் தண்துறை சூழ்ந்து கடையற் கறுத்தவர்மேல்
  தூவியம் பெய்தவன் தொண்டிவண் டார்புன்னைத் தூமலர்கள்
  தாவிய வெண்மணற் றாயறிந் தார்கட்குத் தண்தமிழின்
  ஆவியும் போல இனிதாய் உளதெங்கள் ஆடிடமே.’          (142)

     அதுகேட்டு, ‘இவ்விடத்துக்கண் வா’ என்றாள் என்பதனை உணர்ந்து
அவ்விடத்துச் செல்லும், செல்லத், தலைமகன் வரவு உணர்ந்து, தோழி
தலைமகளைக் குறியிடத்துக் கொண்டுசென்று, ‘யான் செங்காந்தட்பூக்
கொண்டுவருவேன், அவ்விடத்துத் தெய்வமுடைத்து, நின்னால் வரப்படாது, நீ
அவ்வளவும் இப்பொழிலகத்தே நில்’ என்று நிறீஇ நீங்கும். அதற்குச் செய்யுள்:


குறியிடத்துய்த்து மறைபவள் உரைத்தல்


  ‘அஞ்சிறை வண்டறை காந்தளம் போதுசென் றியான் தருவேன்
  பஞ்சுறை 2மெல்லடி யாய்வரற் பாற்றன்று பாழியொன்னார்
  நெஞ்சுறை யாச்செற்ற வேல்மன்னன் நேரி நெடுவரைவாய்
  மஞ்சுறை சோலை வளாய்த்தெய்வம் மேவும் வரையகமே.’     (143)

  ‘3நீவிரை கோதையிங் கேநில்நின் னால்வரற் பாலதன்று
  தீவிரி காந்தள்சென் றியான்தரு வேன்தெய்வம் அங்குடைத்தால்
  பூவிரி வார்பொழிற் பூலந்தை வானவன் பூவழித்த
  மாவிரி தானையெங் கோன்கொல்லி சூழ்ந்த வரையகமே.’     (144)

 

      ‘செங்களம் படக்கொன் றவுணர்த் தேய்த்த
      செங்கோல் அம்பின் செங்கோட் டியானைக்
      கழல்தொடிச் சேஎய் குன்றம்
      குருதிப் பூவின் குலைக்காந் தட்டே.’               (குறுந்-1)

     இவ்வாறு சொல்லி நீங்கும். நீங்கத், தலைமகள் அப்பொழிலிடத்து
நிற்கும்; நின்றாளைத் தலைமகன் எதிர்ப்பட்டுப் புணரும். புணர்ச்சியிறுதிக்கண்
தோழி வந்து, ‘நின் கைபோலக் காந்தள் மலர்ந்தன கொண்டுவந்தேன்,
எம்பெருமாட்டி, நீட்டித்தாளென்று சீறியருளாது போந்தருள்’ என்று, அவளைக்
கொண்டுபோய் ஆயவெள்ளத்தொடுங் 4கூட்டும். இது பகற்குறி யாமாறு.

(பாடம்) 1. சுரந்தன்ன. 2. தேரல்குல். 3. நீவிரி. 4. கூடும்.