குறியிடத்துக் கொண்டுசேறல்
‘ஆழிக் கடல்வையங் காக்கின்ற கோனரி கேசரிதன்
பாழிப் பகைசெற்ற பஞ்சவன் வஞ்சிப்பைம் பூம்புறவிற்
பூழிப் புறமஞ்ஞை அன்னநல் லாய்கொள்கம் போதுதியேல்
தாழிக் குவளைநின் கண்போல் விரியுந் தடமலரே’
(165)
‘விளைக்கின்ற பல்புகழ் வேந்தன் விசாரிதன் விண்டெதிர்ந்து
திளைக்கின்ற1வேந்தரைச் சேவூர் அழித்தவன் தீந்தமிழ்போல்
வளைக்கொன்று கைமங்கை யாய்சென்று கோடும்நின் வாயுள்வந்து
முளைக்கின்ற முள்ளெயிற் றோகொண் டரும்பின முல்லைகளே’(166)
என்று தலைமகளைக் கொண்டுபோந்து அக் குறியிடம் புகுந்து,
பகற்குறியின்கண் நீங்கினவாறே நீங்கத், தனியளாய்நின்ற தலைமகளை
எதிர்ப்பட்டுப் புணரும்; புணர்ச்சியிறுதிக்கண் தோழி தலைமகளைக்
கொண்டுபோதரும். இஃது இரவுக்குறி யாமாறு.
குறி இரவினும் பகலினும் என்னாது, ‘எனப்படுவது’ என்றது
எற்றிற்கோ எனின், குறியென்றற்குச் சிறப்புடையது என்றவாறு.
‘வண்டும் தும்பியும் வரிக்கடைப் பிரசமும்
கொண்டு புணர்நரம் பென்று முரன்று’
ஐந்துவாயிலானுங் கொள்ளப்படுந் துப்புரவினைத் தன்னகத் துடைத்தாய்ப்,
பல்வகைப்பட்ட மரங்களானும் பொலிவுடைத்தாய்ப், புறத்தார் அகத்தாரைக்
காண்பதரிதாய், அகத்தார் புறத்தாரைக் காண்ப தெளிதாய், விழைவுவிடுத்த
விழுமியோரையும் விழைவுதோற்றுவிக்கும் பண்பிற்று என்பதற்குச்
சொல்லப்பட்டது என்பது. அஃதேயெனின், அறியக்கிளக்கப்பட்ட இடம்
என்னாது, ‘கிளந்த இடம்’ என்றது எற்றிற்கோ எனின், வினைச்சொற்கள்
நான்கு விகற்பமுடைய என்றற்கு; யாவை அவ் விகற்பமெனின், கருத்தன்
ஏதுக்கருத்தன் கருவிக் கருத்தன் கருமக்கருத்தன் என இவை; அவற்றுள்,
கருத்தன் என்பது-தச்சன் எடுத்த மாடம், கொல்லன்
செய்த வாள்;
ஏதுக் கருத்தன் என்பது-ஏவினானைக் கருத்தாவாகச் செய்வது; அரசர்
தொட்ட குளம், அரசர் எடுத்த தேவகுலம் இத் தொடக்கத்தன;
(பாடம்) 1. மன்னரைச்.
|