என்னை,
‘குறியதன் இறுதிச் சினைகெட உகரம்
அறிய வருதல் செய்யுளுள் உரித்தே’ (உயிர்
மயங்கியல்-32)
என்றாராகலின்.
(19)
சூத்திரம்-20
பகற்குறி தானே இகப்பினும் வரையார்.
என்பது என்னுதலிற்றோ எனின், பகற்குறியிடம் உணர்த்துதல் நுதலிற்று.
இதன் பொருள்: பகற்குறி தானே என்பது-பகற்குறியிடந்தான்
என்றவாறு; இகப்பினும் வரையார் என்பது-இகந்துபடினும் குற்றங் கூறார்
என்றவாறு.
இகத்தல் என்பது ஒன்றின் இறத்தல் என்றவாறு. இகத்தல் எனினும்
இறத்தல் எனினும் ஒக்கும்: ஒன்றின் இறத்தல் என்பது பலவாதல் என்றவாறு.
ஒரு ஞான்று வேங்கைப் பொதும்பினுள் ஆம்; ஒரு ஞான்று
கோங்கம் பொதும்பினுள் ஆம், குறிஞ்சிநிலமாயின்.
ஒரு ஞான்று புன்னையங்கானலுள் ஆம்; ஒரு ஞான்று
கைதையங்கானலுள் ஆம், நெய்தனிலமாயின்.
இவ்வகை ஏனைநிலத்திற்கும் ஒக்குமாறு அறிந்து உரைக்க.
‘பகற்குறிப் புணர்வுகள் பலவா கும்மே’
என்றாராகலின்,
‘இகப்பினும் வரையார்’
என்ற உம்மையால், பகற்குறியும்
ஒன்றாகலே வலியுடைத்து; என்னையெனின், தங்குறை முடித்தற்பொருட்டு
ஒரு பொழிலகத்தே கொண்டுசென்று விளையாடும் ஆயங்களும் தன்வழிய
ஆகலான் என்பது.
இனி, யார் அறிவார், பண்டுபோலாது இப்பருவம் ஒரு கானலகத்தே
கொண்டுபுகுகின்றாள் என்று கருதுவார்க்கு, அறிந்து பல பொழிலினுள்ளும்
புகுதலிற் பல பொழிலாகவும் பெறும்.
(20)
|