இறையனார் அகப்பொருள் - களவு 121
 

       ‘உயிரினுஞ் சிறந்தன்று நாணே நாணினும்
       செயிர்தீர் காட்சிக் கற்புச் சிறந்தன்று’ (களவியல்-22)

என்பதாகலான், நாண் அழியினும் கற்பு அழியாமை நினைக்கும்; நினைத்து,
உடன்போக்கு நேர்ந்து, தலைசாய்த்து நிலங்கிளையாநிற்கும் நிலைமை இது
சொல்லுவதே போன்றது; அதற்குச் செய்யுள்:

                     
நாணிழந்து வருந்தல்

  ‘ஏணும் இகலும் அழிந்துதெவ் வேந்தரெல் லாமிறைஞ்சிக்
  காணும் கழல்நெடு மாறன்செங் கோல்நின்று காக்குமண்மேற்
  சேணும் அகலா துடனென்னொ டாடித் திரிந்துவந்த
  நாணும் அழியத் தகுகற்பு மேம்பட நைகின்றதே.’           (176)

    ‘அளிதோ தானே நாணே நம்மொடு
    நனிநீ டுழந்தன்று மன்னே இனியே
    வான்பூங் கரும்பின் ஓங்குமணற் சிறுசிறைத்
    தீம்புனல் நெறிதர வீந்துக் காஅங்குத்
    தாங்கும் அளவை தாங்கிக்
    காமம் நெறிதரக் கைந்நில் லாதே.’                (குறுந்-149)

  இன்னும் இது சொல்லுவதேபோன்றது அந்நிலைமை:

   
‘சிலரும் பலரும் கடைக்கண் நோக்கி
    மூக்கின் உச்சிச் சுட்டுவிரல் சேர்த்தி
    மறுகிற் பெண்டிர் அம்பல் தூற்றச்
    சிறுகோல் வலந்தனள் அன்னை அலைப்ப
    அலந்தனென் வாழி தோழி கானற்
    புதுமலர் தீண்டிய பூநாறு குரூஉச்சுவற்
    கடுமா பூண்ட நெடுந்தேர் கடைஇ
    நடுநாள் வரூஉம் இயல்தேர்க் கொண்கனொடு
    செலவயர்ந் திசினால் யானே
    அலர்சுமந் தொழிகவிவ் வழுங்க லூரே.’        (நற்றிணை, 149)

     இங்ஙனம் இவள் உடன்படும். உடன்பட்டது உணர்ந்து வைத்துத்
தாயுழைச் செல்லும்; தாயும் மகளது வேறுபாடு கண்டு, உற்றதறியாது, நற்றிறம்
படர்ந்து செல்கின்ற காலமன்றே, ஆகலான், கண்டவாறே, ‘அன்னாய், என்
மகட்கு இவ் வேறுபாடு எற்றினான் ஆயிற்று? எனக்குச் சொல்லாய்’ என்னும்.
என, ‘என்னால் அறியப்பட்டதுஞ் சிறிது உண்டு’ என்று அறத்தொடு
நிற்குமாறு.