30இறையனார் அகப்பொருள்

       தமியர் காண என்பது-தம் உணர்வினர் அன்றி எதிர்ப்பட
என்றவாறு.

      அஃதேயெனின், இவர் தம் உணர்வினர் அல்லராகின்றது, காணாமுன்
ஆபவோ, கண்டபின் ஆபவோ, காட்சியோடு உடன் ஆபவோ எனின்,
காணாமுன் தம் உணர்வினர் அல்லராப எனின், காட்சி காரணம்
அன்றாயிற்றாம், தம் உணர்வினர் அல்லர் ஆதற்கு; அல்லதூஉம்
காரணமின்றி ஆகலான் எப்பொழுதும் தம் உணர்வினர் அல்லராகல்
வேண்டும்.

      இனிக், கண்டபின் தம்முனர்வினர் அல்லார் எனின், காட்சியது
நீக்கத்துக்கண்ணும் தம் உணர்வினர் அல்லார் ஆகல் வேண்டும்,
‘உண்டபின் வந்தான் சாத்தன்’ என்றால், உண்டற் கருமக் கழிவின்கண்
வந்ததுபோல அல்லதூஉம் கண்டபின் தம் உணர்வினர் அல்லராகவே,
கண்ட சமவாயத்துத் தம் உணர்வினராகல் வேண்டும்; ஆகவே, கண்டும் தம்
உணர்வினராய் நின்றார் பின்னை மயங்குதற்குக் காரணம் என்னையோ
என்பது.

      இனிக், காட்சியும், தம் உணர்வினர் அல்லராகலும் உடன் நிகழுமே
யெனின், காட்சி என்னுங் காரணத்தால் தம் உணர்வினர் அல்லராதற்றன்மை
நிகழற்பாற்றன்று. ஒரு காலத்து ஓரிடத்து ஒருங்கு தோற்றின பொருள்
ஒன்றனை ஒன்று முடித்தன எனப்படாமை காண்டும், ஆவிற்கு இருகோடு
போல என்பது. அதனால், மூன்று அல்லது நான்காவது காலம் இல்லை.
இன்மையின், அவர் காட்சியானே தம் உணர்வினர் அல்லர் என்பது
முடிக்கல் வேண்டும். எங்ஙனம் முடிக்குமாறு எனின், காணாமுன்னே தம்
உணர்வினர் அல்லராகற்றன்மை உடையர் ஆகலின் என்பது. என்னை,
ஏனாதிமோதிரம் செறித்தற் றிருவுடையான் ஒருவன், ஏனாதிமோதிரஞ்
செறிக்கும் அத்திரு அவன் செறிக்கின்ற பொழுதே உண்டாயிற்றன்று;
முற்கொண்டு அமைந்து கிடந்தது. அரசு வீற்றிருந்த திருவுடையான் ஒருவன்,
அரசுவீற்றிருக்கும் அத்திரு அரசுவீற்றிருக்கின்ற பொழுதே உண்டாயிற்று
அன்று; முற்கொண்டு அமைந்து கிடந்தது, அது பின்னை ஒரு காலத்து
ஓரிடத்து ஒரு காரணத்தான் எய்துவிக்கும். அதுபோல, இன்ன நாள், இன்ன
பக்குவத்து, இன்ன பொழுது, இன்ன இடத்து இவள் காரணமாக இவன் தன்
உணர்வினன் அல்லனாம் என்பதூஉம், இவன் காரணமாக இவள் தன்
உணர்வினள் அல்லளாம் என்பதூஉம் முன்னே முடிந்து கிடந்தன. அது
பின்னுங் கொணர்ந்து எய்துவிக்கும்;

     என்னை,
         ‘
ஒளிப்பினும் ஊழ்வினை யூட்டாது கழியாது
என்பதாகலான்.