இறையனார் அகப்பொருள் - களவு 43
 

   ‘விண்டே யெதிர்ந்ததெவ் வேந்தர் படவிழி ஞத்துவென்ற
   ஒண்தேர் உசிதனெங் கோன்கொல்லிச் சார லொளிமலர்த்தா
   துண்டே யுழல்வா யறிதியன் றேயுள வேலுரையாய்
   வண்டே மடந்தை குழல்போற் கமழு மதுமலரே
.’              (7)

   ‘பொருங்கழல் வானவற் காயன்று பூலந்தைப் போர்மலைந்தார்
   ஒருங்கழ லேறவென் றான்கொல்லிச் சாரலொண் போதுகடம்
   மருங்குழல் வாய்நீ யறிதிவண் டேசொல் லெனக்கு மங்கை
   கருங்குழல் போலுள வோவிரை நாறுங் கடிமலரே
.’             (8)

   ‘தேற்றமில் லாததெவ் வேந்தரைச் சேவூர்ச் செருவழித்துக்
   கூற்ற மவர்க்காய வன்கொல்லிச் சாரல்கொங் குண்டுழல்வாய்
   மாற்ற முரைநீ யெனக்குவண் டேமங்கை வார்குழல்போல்
   நாற்ற முடைய உளவோ அறியு நறுமலரே
.’                   (9)

        ‘கொங்குதேர் வாழ்க்கை அஞ்சிறைத் தும்பி
        காமஞ் செப்பாது கண்டது மொழிமோ
        பயிலியது கெழீஇய நட்பின் மயிலியற்
        செறியெயிற் றரிவை கூந்தலின்
        நறியவு முளவோ நீயறியும் பூவே.
’              (குறுந் - 2)
 

இவையும் அப் பாற்படுத்துக்கொள்க.

     அவ்வகை தன்னைப் புகழத் தலைமகள் ஆற்றாளாயினாளாம்;
என்னை, சிறியவரும், தம் முன்னின்று தம்மைப் புகழ்ந்த விடத்து, நாணி
வருந்துபவாகலான்; தான் பெருமையும் பெருநாணும் உடையாள், தலைமகன்
முன்னின்று புகழ் ஆற்றாளாவது சொல்லவேண்டுமோ? அவ்வகை
ஆற்றாளாயினாளது ஆற்றாமை தலைமகற்குப் புலனாயிற்று. புலனாக,
அதனைக் கண்டு, நீருடை நிலத்து நிவந்த நீள்மரம் வெப்பத்தால்
தெறப்படாததுபோல, யான் உழையேனாக இவ் வேறுபாடு இவட்கு
ஆகாதன்றே! இஃது எற்றினான் ஆயிற்றுக்கொல்லோ என நினைந்தான்.
நினைந்து, அறிந்தேன் என்னது காதல் மிகவினாற் பாராட்டப்போலும் என
உணர்ந்தான். உணர்ந்து, யான் தன்முன்னின்று தன்னைப் பாராட்டவும்
இவ்வகை மெலிவு சென்ற பெருநாணுடையாள், புறத்து யாரானும் ஒருவர்
இவ்வொழுக்கத்தை உணர்வார்கொல்லோ என்று உட்கொண்ட ஞான்று
இவள் இறந்துபடும்போலும் எனப் பெரியதோர் ஆற்றாத் தன்மையன்
ஆயினான். ஆற்றாத் தன்மையன் என்பது எவ்வுணர்வும் இன்றி
அவ்வாற்றாமை தானேயாவது. அவ்வகை ஆற்றாய தலைமகனது
ஆற்றாமைக்குக் கவன்று முன் நாணிற் சென்று எய்திய ஆற்றாமை
நீங்கித்தலைமகள் ஆற்றாளாயினாள், வேலேறுபடத் தேளேறு மாய்ந்தாற்போல.
அது தலைமகற்குப் புலனாயிற்று.