8இறையனார் அகப்பொருள்

காண்டும்’ என்று, எல்லாரும் ஒருப்பட்டு, அரசனுழைச் சென்றார். அரசனும்
எதிர்சென்று, ‘என்னை, நூற்குப் பொருள் கண்டீரோ?’ என, ‘அது காணுமாறு
எமக்கோர் காரணிகனைத் தரல்வேண்டும்’ என, ‘போமின், நுமக்கோர்
காரணிகனை யான் எங்ஙனம் நாடுவேன்!
நீயிர் நாற்பத்தொன்பதின்மர்
ஆயிற்று. நுமக்கு நிகராவார் ஒருவர் இன்மையின் அன்றே’ என்று அரசன்
சொல்லப், போந்து, கல்மாப் பலகை ஏறியிருந்து ‘அரசனும் இது சொல்லினான்,
யாம் காரணிகனைப் பெறுமாறு என்னைகொல்’ என்று சிந்திப்புழி, சூத்திரஞ்
செய்தான் ஆலவாயில் அவிர்சடைக் கடவுளன்றே, அவனையே
காரணிகனையுந் தரல்வேண்டும் எனச் சென்று வரங்கிடத்தும் என்று
வரங்கிடப்ப, இடையாமத்து, ‘இவ்வூர்
உப்பூரி குடிகிழார் மகனாவான்
உருத்திரசன்மன் என்பான், பைங்கண்ணன், புன்மயிரன், ஐயாட்டைப்
பிராயத்தான், ஒரு மூங்கைப்பிள்ளை உளன்; அவனை அன்னனென்று இகழாது
கொண்டுபோந்து, ஆசனத்தின்மேல் இரீஇக் கீழிருந்து சூத்திரப் பொருள்
உரைத்தாற் கண்ணீர் வார்ந்து மெய்ம்மயிர் சிலிர்க்கும், மெய்யாயின உரை
கேட்டவிடத்து; மெய்யல்லா உரை கேட்டவிடத்து வாளா இருக்கும்; அவன்
குமார தெய்வம், அங்கோர் சாபத்தினால் தோன்றினான்’ என முக்கால்
இசைத்த குரல் எல்லார்க்கும் உடன்பாடாயிற்று; ஆக, எழுந்திருந்து,
தேவர்குலத்தை வலங்கொண்டு போந்து, உப்பூரி குடிகிழாருழைச்
சங்கமெல்லாஞ் சென்று, இவ் வார்த்தை யெல்லாஞ் சொல்லி, ‘ஐயனாவான்
உருத்திரசன்மனைத் தரல் வேண்டும்’ என்று வேண்டிக் கொடுபோந்து,
வெளியது உடீஇ, வெண்பூச் சூட்டி, வெண்சாந்து அணிந்து, கல்மாப்
பலகையேற்றிக் கீழிருந்து சூத்திரப் பொருள் உரைப்ப, எல்லாரும் முறையே
பொருளுரைப்பக் கேட்டு வாளா இருந்து,
மதுரை மருதனிளநாகனார்
உரைத்தவிடத்து ஒரோ விடத்துக் கண்ணீர் வார்ந்து, மெய்ம்மயிர் நிறுத்தி,
பின்னர்க் கணக்காயனார் மகனார் நக்கீரனார் உரைத்தவிடத்துப் பதந்தொறுங்
கண்ணீர் வார்ந்து, மெய்ம்மயிர் சிலிர்ப்ப இருந்தான், இருப்ப, ஆர்ப்பெடுத்து,
‘மெய்யுரை பெற்றாம் இந்நூற்கு!’ என்றார்.

      அதனால்,
உப்பூரி குடிகிழார் மகனாவான் உருத்திரசன்மனாவான்
செய்தது இந்நூற்கு உரை என்பாரும் உளர்; அவர் செய்திலர், மெய்யுரை
கேட்டார் என்க. மதுரை ஆலவாயிற் பெருமானடிகளாற் செய்யப்பட்ட நூற்கு
நக்கீரனாரால் உரை கண்டு, குமாரசுவாமியாற் கேட்கப்பட்டது என்க. இனி
உரை நடந்து வந்தவாறு சொல்லுதும்:

         
(பாடம்) 1. இன்மையின் இன்றே.