‘இஃது அறிவது அறியாக்காலத்து நிகழ்ந்ததனை அறிவதறிந்து,
கொண்டார்க்குரியார் கொடுத்தார் என்பதும், உற்றார்க்குரியார் பொற்றொடி மகளிர் என்பதும்
நினைந்து, அவனை வழிபடாது பிறிதொன்று ஆவதாயின், இக் குலத்துக்கு வடுவாங்கொல்லோ எனக்
கருதினமையான், நின்மகள் வேறுபட்டது’ என்னும். எனவே, தாயறிவினொடு மாறுகொள்ளாதாயிற்று.
என்னை, ‘விளையாடி வம்மின்’ என்றமையின்.
இனிப், பெருமையொடு மாறுகொள்ளாதாயிற்று, அக்காலத்து நற்செய்கை
செய்ததனை இக்காலத்து நினைந்தமையின்.
இனிக், கற்பினொடு மாறுகொள்ளாதாயிற்று, இவ்வாறன்றிப்
பிறிதோராறு ஆயின இடத்துக் குடிக்கு வழுவாம் எனக் கருதினமையின்.
இனித், தனது காவலொடு மாறுகொள்ளாதாயிற்று, இருவரும் இருந்த
நிலைமைக்கண் நிகழ்ந்தது என்றமையின்.
இனி, நாணினொடு மாறுகொள்ளாதாயிற்று, அறிவது அறியாக்காலத்து
நிகழ்ந்தது என்றமையின்.
இனி, உலகினொடு மாறுகொள்ளாதாயிற்று, உற்றார்க்கு உரியார்
பொற்றொடி மகளிர் என்றமையின். இது மாறுகோள் இல்லாமொழியாய் நிகழ்ந்தவாறு. இது பூத்தரு
புணர்ச்சி.
இனிக், களிறுதரு புணர்ச்சிக்குச் செய்யுள்:
‘உறுகற் புடைமையின் உள்ளுமிப் பேதை உசிதன்ஒன்னார்
மறுகத் திறலுரும் ஏந்திய கோன்கொல்லி மால்வரைவாய்த்
துறுகற் புனமும் சிதைத்தெங்கள் தம்மையும் துன்னவந்த
சிறுகட் களிறு கடிந்திடர் தீர்த்த சிலம்பனையே.’
(130)
‘கனஞ்சேர் முலைமங்கை உள்ளும்இப் போதுங் கடையலொன்னார்
மனஞ்சேர் துயர்கண்ட வானவன் மாறன்மை தோய்பொதியிற்
புனஞ்சேர் தினையும் கவர்ந்தெம்மைப் போகா வகைபுகுந்த
சினஞ்சேர் களிறு கடிந்திடர் தீர்த்த சிலம்பனையே.’
(131)
இவ்வகையும் அவ்வாறே உரைத்துக்கொள்க.
இனிப், புனல்தரு புணர்ச்சி ; அதற்குச் செய்யுள்:
‘ஓங்கிய வெண்குடைப் பைங்கழற் செங்கோல் உசிதன்வையை
வீங்கிய தண்புனல் ஆடி விளையாட் டயர்பொழுதின்
தேங்கிய தெண்திரை வாங்க முழுகுநின் சேயிழையாள்
நீங்கிய போதருள் செய்தனன் வந்தோர் நெடுந்தகையே.’ (132)
|