வினைமுற்றிய கனைகழலோன் மனைவேள்வி மலிவுரைத்தன்று. (இ - ள்.) கைத்தொழில் முடிவுபெற்ற செறிந்தகழலினையுடையோன் இல்லறத்தினுடைய நிறைவைச் சொல்லியது. எ-று. (வ - று.) நின்ற புகழொடு நீடுவாழ்கிவ்வுலகில் ஒன்ற வுயிர்களிப்ப வோம்பலால்- வென்றமருள் வாள்வினை நீக்கி வருக விருந்தென்னும் ஆள்வினை வேள்வி யவன். (இ - ள்.) நிலைநின்ற கீர்த்தியோடு நெடுங்காலம்வாழ்க இந்த உலகிடத்து,ஒன்றுபட உயிர்க்கு மகிழ்ச்சிபெறக்காத்தலால்; பகைவரை வென்று பூசலுள் வாட்போரைமுடித்து வருக விருந்தினரென்று சொல்லும், முயற்சியாற்செய்யும் புண்ணியத்தையுடைய வேந்தன். எ-று. (27) 216.பாணாற்றுப்படை சேணோங்கிய வரையதரிற் பாணனை யாற்றுப்படுத்தன்று
(இ - ள்.) மிகவுமுயர்ந்த மலைவழியிடத்துப்பாணனை வழியிலே செலுத்தியது. (வ - று.) இன்றொடை நல்லிசை யாழ்ப்பாணவெம்மைப்போற் கன்றுடை வேழத்த கான்கடந்து - சென்றடையிற் காமரு சாயலாள் கேள்வன் கயமலராத் தாமரை சென்னி தரும். (இ - ள்.) இனிய கோவையினையுடைய நல்லிசையான் மலிந்த யாழினைவல்ல பாணனே, எங்களையொப்பக் களபத்தினையுடைய யானை இயங்கப்பட்ட காட்டைக்கழிந்துசென்று பொருந்தின், அழகுமருவின மென்மையினையுடையாள் கணவன் வாவியிற் பூவாத 1பொற்றாமரைப் பூவைத் தலையிலே சூட்டும். எ-று. சென்றடையின், தருமென்க. (28) 217. கூத்தராற்றுப்படை ஏத்திச்சென்ற விரவலன் கூத்தரை யாற்றுப்படுத்தன்று. (இ - ள்.) தலைவனைக் கண்டு துதித்துமீண்டஇரப்பாளன் கூத்தாடுமவரை வழியிலே செலுத்தியது. (வ - று.) கொலைவிற் புருவத்துக் கொம்பன்னார்கூத்தின் தலைவ தவிராது சேறி-சிலைகுலாம்.
1. பு-வெ.31. |