காரினை வென்ற கவிகையான் கைவளம் வாரினை கொண்டு வரற்கு. (இ - ள்.) கொல்லுஞ்சிலைபோன்ற புருவத்தினையுடைய வஞ்சிக்கொம்பன்ன விறலியர்தம் நிருத்தத்திற்குத் தலைவனே, ஒழியாது போவாயாக; இந்திரதனு வளையும் மழையை வென்ற தியாகத்தினையுடையான் கைவழங்குஞ் செல்வத்தைத் தொகுத்துக்கொண்டு வரற்கு எ-று. (29) 218. பொருநாற்றுப்படை பெருநல்லா னுழையீராகெனப் பொருநனை யாற்றுப்படுத்தன்று. (இ - ள்.) மிக்க நன்மையினையுடையவன் பக்கத்தீராகவெனக்கிணைகொட்டுமவனை வழிப்படுத்தது. எ-று. (வ - று.) தெருவி லலமருந் தெண்கட் 1டடாரிப் பொருவில் பொருநநீ செல்லிற்- செருவில் அடுந்தடக்கை நோன்றா ளமர்வெய்யோ னீயும் நெடுந்தடக்கை யானை நிரை. (இ - ள்.) தெருவிலே சுழன்று திரியும் தெளிந்தகண்ணால் மலிந்த கிணையினையுடைய ஒப்பில்லாத பொருநனே, நீ போவாயாகிற் பூசலிடத்துக் கொல்லும் பெரியகையினையும்வலிய தாளினையுமுடைய போரை விரும்புவோன் வழங்குவன்; உயர்ந்த பெரிய கையினையுடைய களிற்றின் நிரையை. எ-று. (30) 219. விறலியாற்றுப்படை திறல்வேந்தன் புகழ்பாடும் விறலியை யாற்றுப்படுத்தன்று. (இ - ள்.) வெற்றிமன்னன் கீர்த்தியைச்சொல்லும் பாணிச்சியை வழிப்படுத்தது. (வ - று.)2சில்வளைக்கைச் செவ்வாய் விறலிசெருப்படையான் பல்புகழ் பாடிப் படர்தியேல்- நல்லவையோர் ஏத்த விழையணிந் தின்னே வருதியாற் 3பூத்த கொடிபோற் பொலிந்து. (இ - ள்.) சில வளைகளாற் சிறந்த கையினையும் சிவந்தவாயினையுமுடைய பாணிச்சி , பூசலிற்சிறந்த சேனையினையுடையான்றன் பல கீர்த்தியையும்வாழ்த்திப் போவாயாயின், நல்ல அவையிடத்துள்ளோர்புகழ ஆபரணத்தைப் பூண்டு இப்பொழுதே மீள்வையால், மலர்ந்தவல்லியை யொப்பப் பொலிவுபெற்று. (31) 220. வாயுறை வாழ்த்து பிற்பயக்கு மெஞ்சொல்லென முற்படர்ந்த மொழிமிகுத்தன்று.
1. மதுரைக். 99-102, ந 2. பதிற் .57: 6, உரை. 3. சீவக. 419 : 1; பெருங். 4 . 11: 47-8. |