காத்தல்சால் செங்கோற் கடுமானெடுவழுதி ஏத்தல்சால் வேம்பி னிணர். (இ - ள்.) கடகம் பொலிவுறு புயத்தினையுடைய வீரர் போர்ப்பூவைச் சூடப் பதாகையாற் சிறந்த தேர்பகைத்திரளை வருத்துங் காலமாகிய போரில் மகுடத்திலேசூடும், காத்தலமைந்த செங்கோலினையும் கடிய குதிரையினையுமுடைய அளவிடுதற்கரிய பாண்டியன் புகழ்தலமைந்த வேம்பின் பூக்கொத்தினை எ-று. இணர் முடியணியு மென்க. (2) 242. ஆர் விறற்படை மறவர் வெஞ்சமங்காணின் மறப்போர்ச் செம்பியன் மலைப்பூ வுரைத்தன்று. (இ - ள்.) வெற்றியினையுடைய சேனை வீரர்தம் வெய்ய பூசலைக்காணிற் கொடுவினைப் பூசலைச் செய்யவல்லசோழன் புனையும் மலரினைச் சொல்லியது எ-று. வ - று.1கொல்களி றூர்வர் கொலிமலி வாண்மறவர் வெல்கழல் வீக்குவர் வேலிளையர்- மல்கும் கலங்க லொலிபுனற் காவிரி நாடன் அலங்க லமரழுவத் தார். (இ - ள்.) கொல்லும் யானையைச் செலுத்துவர்கொலைத்தொழிலின் மிக்க வாள்வீரர்; வெல்லும்வீரக்கழலினைக் கட்டுவர் வேலினையுடைய இளையவர்; மிகும் செங்கலங்கலையுடைத்தாய் முழங்கும் புனலினையுடையபொன்னிநாடன் மாலை, பூசல் நடுவு ஆத்தி எ-று. (3) 243.உன்னநிலை துன்னருஞ் சிறப்பிற் றொடுகழன்மன்னனை உன்னஞ் சேர்த்தி யுறுபுகழ் மலிந்தன்று. (இ - ள்.) கிட்டுதற்கரிய நன்மையினையும் கட்டுங்கழலினையுமுடைய வேந்தனை நிமித்தம்பார்க்கும் மரத்தொடு கூட்டி மிகுபுகழைச் சொல்லியது எ-று. வ - று.1துன்னருந் தானைத் தொடுகழலான்றுப்பெதிர்ந்து முன்னர் வணங்கார் முரண்முருங்க-மன்னரும் ஈடெலாந் தாங்கி யிகலவிந்தார் நீயுநின் கோடெலா முன்னங் குழை. (இ - ள்.) கிட்டுதற்கரிய சேனையினையும் கட்டும்வீரக்கழலினையுமுடைய நம் வேந்தன்றன் வலியோடு மாறுபட்டுமுன்னேவந்து பணியாதார் மாறுபாடு இனிக்கெட, எதிர்ந்தவேந்தரும் இவன்வலியெலாம் தடுத்து மாறுபாடொழிந்தார்; நீயும் நின்னுடைய பணையெல்லாம் 2உன்ன மரமே, தளிர்ப்பாயாக எ-று. எ-று. (4)
1. தொல். புறத். சூ. 5, இளம். மேற். 2. தொல். புறத். சூ. 5; பதிற். 40 : 17-8, 61: 6; புறநா. 3: 23. |