(இ - ள்.) குற்றமொன்றும் ஆராயாது நாம் ஊட, விசாரித்து நம் கொழுநர் நீங்குதலின்றியே தலையளி பண்ணினும் விரும்பாயாய் வேறுபாடின்றி உறங்கேமெனச் சொல்லாநின்றாய்; தங்கும் இருளையுடைய மயக்கத்தைச் செய்யும் மாலைக்காலத்து மனமே, நிறையுடையை நீ எ-று. (15) 321. உரைகேட்டு நயத்தல் துயரொடு வைகிய சூழ்வளைத் தோளி உயர்வரை நாட னுரைகேட்டு நயந்தன்று. (இ - ள்.) துன்பத்தோடு தங்கிய சூழ்ந்த தொடியினையுடைய தோளி உயர்ந்த மலைநாடன்றன் வார்த்தையைக் கேட்டு விரும்பியது எ-று. வ - று. ஆழ விடுமோ வலரொடு வைகினும் தாழ்குர லேனற் றலைக்கொண்ட - நூழில் விரையாற் கமழும் விறன்மலை நாடன் உரையாற் றளிர்க்கு முயிர். துயரக்கடலுள்ளே அழுந்தவிடுமோ? பிறர் தூற்றும் பழியோடு தங்கினும் குளிர்ந்த கதிரையுடைய தினையிலே தலைமணந்த நூழிலென்னும் வல்லியினுடைய மணங்கமழும் வெற்றியான் அமைந்த வரை நாடன் வார்த்தையாலே தளிர்க்கும் என்னுயிர் எ-று. உயிர் ஆழவிடுமோ. ஆல்: அசை. (16) 322. பாடகச் சீறடி பணிந்தபின்இரங்கல் கோடுயர் வெற்பன் கூப்பிய கையொடு 1பாடகச் சீறடி பணிந்தபி னிரங்கின்று. (இ - ள்.) குவடு நீண்டமலையினையுடையவன்குவித்த கையுடனே பாடகம் அணிந்த சிற்றடியிலே வணங்கியபின்பு நெஞ்சு நெகிழ்ந்தது எ-று. வ - று. அணிவரு பூஞ்சிலம் பார்க்கு மடிமேல் மணிவரை மார்பன் மயங்கிப் - பணியவும் வற்கென்ற நெஞ்சம் வணங்காய் சிறுவரை நிற்கென்றி வாழியர் நீ. (இ - ள்.) அழகுமிகும் பொலிந்த சிலம்பு ஆரவாரிக்கும் அடிமேலே அழகிய வரைபோன்ற அகலத்தையுடையவன் கலங்கி வணங்கவும் வலிமையுற்ற மனமே , வணங்காயாய் சிறியகாலை ஊடல்தீராதே நிற்பனென்று சொல்லாநின்றாய்; வாழ்வாயாக நீ எ-று. வாழியரென்பது நகை. (17) 323. பள்ளிமிசைத் தொடர்தல் மாயிருங் கங்குன் மாமலை நாடனைப் பாய னீவிப் பள்ளிமிசைத் தொடர்ந்தன்று.
1. பு.வெ. 303. |