பக்கம் எண் :

வ - று.1உளைத்தவர் கூறுமுரையெல்லா நிற்க
முளைத்த முறுவலார்க் கெல்லாம் - விளைத்த
பழங்க ளனைத்தாய்ப் படுகளி செய்யும்
முழங்கும் புனலூரன் மூப்பு .

(இ - ள்.) வெறுத்தவர் கூறும் வார்த்தையெல்லாம் அங்ஙனே நிற்க, தோன்றின எயிற்றினையுடைய பரத்தையர் பலர்க்கும் ஆக்கின பழந்தேறலையொத்து மிக்க களிப்பினைப்பண்ணும், ஒலிக்கும் நீரினையுடைய ஊரனது முதுமை எ-று.

(14)

339. பரத்தை வாயில் பாங்கி கண்டுரைத்தல

உம்மி லரிவை யுரைமொழி யொழிய
எம்மில் வலவனுந் தேரும் வருமெனப்
பரத்தை வாயிற்குப் பாங்கி பகர்ந்தன்று.

(இ - ள்.) உங்கள் வீட்டிடத்து மடவாள் சொன்ன வார்த்தை நீங்க, எங்கள் அகத்திடத்துப் பாகனும்தேரும் வருமெனச் சொல்லி இற்பரத்தை தோழிக்குச் சேரிப்பரத்தை தோழி சொல்லியது எ-று.

வ - று. மாணலங் கொள்ளு மகிழ்நன்றணக்குமேற்
பேணலம் பெண்மை யொழிகென்பார் - காணக்
கலவ மயிலன்ன காரிகையார் சேரி
வலவ னெடுந்தேர் வரும்.

(இ - ள்.) 'மாட்சிமைப்பட்ட எமது அழகினைக் கைக்கொள்ளும் தலைவன் எம்மை விட்டு நீங்குவானாயின், விரும்பேம்; பெண்மைத் தன்மை எம்மிடத்து நீங்குக' என்று சொல்லும் இற்பரத்தையர் காணத் தோகை மயிலினையொத்த பரத்தையர்தம் சேரிக்கண் பாகனையுடைய உயரிய தேர் வாராநிற்கும் எ-று.

பேணலம் பெண்மையொழிகென்பார்காண வரும் .

(15)

340. பிறர்மனைத் துயின்றமை விறலிகூறல்

மற்றவர் சேரியின் மைந்த னுறைந்தமை
இற்றென விறலி யெடுத்துரைத் தன்று.

(இ - ள்.) பரத்தையர் சேரியிடத்துத்தலைவன் தங்கினபடி இத்தன்மைத்தெனப் பாணிச்சி எடுத்துச் சொல்லியது எ-று.

வ - று. தண்டா ரணியவாந் தையலார் சேரியுள்
வண்டார் வயலூரன் வைகினமை - உண்டால்
அறியே னடியுறை யாயிழையாற் பெற்றேன்
சிறியேன் பெரிய சிறப்பு.

(இ - ள்.) குளிர்ந்த மாலையினையுடைய அழகை ஆசைப்படும் பரத்தையர் சேரியிடத்திலே சுரும்பு நிறைந்த கழனியையுடைய ஊரன் தங்கினமை நீ அருளினபடியால் உண்டு; யான் அறியேன்; அடி பொருந்தும் ஆபரணத்தினையுடையாளாலே பெற்றேன், சிறிய யான் பெரிய நன்மையை எ-று .

(16)


1. தொல். அகத். சூ. 54, இளம்.; சூ. 51, ந. மேற் .