336. பரத்தை கூறல் தேங்கமழ் சிலம்பன் றாரெமக்கெளிதெனப் பாங்கவர் கேட்பப் பரத்தை மொழிந்தன்று. (இ - ள்.) மணங்கமழும் மாலையையுடைய தலைவன் மாலை எமக்குப் பெறுதற்கு எளிதென்று சொல்லிப் பாங்காயினார் கேட்பப் பரத்தை மொழிந்தது எ-று. வ - று. பலவுரைத்துக் கூத்தாடிப் பல்வயலூரன் நிலவுரைக்கும் பூணவர் சேரிச் - செலவுரைத்து வெங்கட் களியால் விறலி விழாக்கொள்ளல் எங்கட் கவன்றா ரெளிது. (இ - ள்.) பலபொய்யும் சொல்லி நடித்துப்பல செய்யினையுடைய ஊரன் நிலவைக் காட்டும் முத்தணியினையுடைய பரத்தையர் சேரியிடத்துப் போக்கைச் சொல்லி வெவ்விய மதுவையுண்ட மகிழ்ச்சியாற் பாணிச்சி விழாவினைக் கொண்டாடாதேகொள்; எமக்கு அவனுடையமாலை எளிது எ-று. ஆதலால், விழாக்கொள்ளல். (12) 337. விறலிகேட்பத் தோழி கூறல் பேணிய பிறர்முயக் காரமு தவற்கெனப் பாணன் விறலிக்குப் பாங்கி மொழிந்தன்று. (இ - ள்.) விரும்பிய பரத்தையருடைய புல்லுதலைப் பெறுதல் அரிய அமிழ்தத்தோடொக்கும் தலைவற்கெனச் சொல்லிப் பாணனுடைய பாணிச்சிக்குத் தோழி சொல்லியது எ-று. வ - று.1அரும்பிற்கு முண்டோவலரது நாற்றம் பெருந்தோள் விறலி பிணங்கல் - சுரும்போ டதிரும் புனலூரற் காரமிர்த மன்றோ முதிரு முலையார் முயக்கு. (இ - ள்.) அரும்பிற்கும் உண்டோ பூவினது வாசம்? பெரிய தோளினையுடைய பாணிச்சி, பிணங்காதேகொள்; வண்டுடனே ஆர்க்கும் புனலையுடைய ஊரற்கு நிறைந்த அமிர்தமல்லவோ முதிருமுலையினை யுடையார் தழுவுதல் எ-று. (13) 338. விறலி தோழிக்கு விளம்பல் ஆங்கவன் மூப்பவர்க் கருங்களிதருமெனப் பாங்கி கேட்ப விறலி பகர்ந்தன்று. (இ - ள்.) அவ்விடத்துத் தலைவன் மூப்புப்பரத்தையர்க்குப் பெறுதற்கரிய மகிழ்ச்சியைத்தருமெனச் சொல்லி இற்பரத்தை தோழிகேட்பப்பாணிச்சி சொல்லியது எ-று .
1. தொல். அகத். சூ. 54, இளம். சூ. 51, ந. மேற். |