பக்கம் எண் :

(இ - ள்.) விண்ணில் நடக்கு நிறைமதியிடத்து நாடோறும் காட்டிலே திரியும் முயலைக்காணாநிற்கும்; கையிடத்து ஒள்ளிய வளைகழலவும் உணரானாகி ஒளித்து வாழுங் கள்வனைக் காணாது, இந்தப்பதி எ-று.

இவையிரண்டும் கைகடந்த காமத்த; இக்கூற்று இவர்க்கே உரிய; அல்லன யாவர்க்கும் உரிய.

(9)

334. வெறியாட்டு

தேங்கமழ் கோதை செம்ம லளிநினைந்
தாங்கந் நிலைமை யாயறி யாமை
வேங்கையஞ் சிலம்பற்கு வெறியா டின்று.

(இ - ள்.) மணநாறு மாலையுடையாள், தலைவனது அருளைக் கருதி அவ்விடத்து அந்நிலைமையைத் தாயறியாதபடி வேங்கைமரத்தாற் பொலிந்த மலையையுடைய முருகற்குவெறிக்கூத்து ஆடியது எ-று.

வ - று.1வெய்ய நெடிதுயிரா வெற்பனளிநினையா
ஐய நனிநீங்க வாடினாள் - மையல்
அயன்மனைப் பெண்டிரொ டன்னைசொ லஞ்சி
வியன்மனையு ளாடும் வெறி .

(இ - ள்.) வெவ்விதாகத் தீர்க்க 2.சுவாதம்விட்டுத் தலைவனது அருளைக் கருதித் தலைவன் வருவனோவாரானோ வென்னும் ஐயப்பாடு மிகவும் நீங்க ஆடினாள், மயக்கத்தினையுடைய அயன்மனை மகளிருடனே அன்னை சொல்லையும் அஞ்சி, அகன்ற மனையிடத்தே ஆடும் வெறிக்கூத்தை எ-று .

ஆடினாள் யார்? தலைவி .

(10)

335. பாண்வரவுரைத்தல்

மாணிழைக்கு வயலூரன்
பாண்வரவு பாங்கிமொழிந் தன்று.

(இ - ள்.) மாண்ட ஆபரணத்தினை உடையாளுக்கு வயலூரன்றன் பாணன் வரவைத் தோழி சொல்லியது எ-று.

வ - று. அஞ்சொற் பெரும்பணைத்தோளாயிழையாய் தாநொடியும்
3வஞ்சந் தெரியா மருண்மாலை - எஞ்சேரிப்
பண்ணியல் யாழொடு பாணனார் வந்தாரால்
எண்ணிய தென்கொலோ வீங்கு.

(இ - ள்.) அழகிய சொல்லையும் பெரிய வேயன்னதோளினையும் தெரிந்த ஆபரணத்தினையு முடையாய், தாஞ்சொல்லும் பொய்ம்மையை ஆராயமாட்டாத மயக்கஞ்செய்யும் மாலைப்பொழுதின்கண் எமது சேரியிடத்து இசைக்கு ஒத்தயாழுடனே பாணனார் வந்தார்; இவர் கருதிய காரியம்என்னையோ? இவ்விடத்து எ-று.

(11)


1. தொல். புறத். சூ. 5, இளம். மேற். 2. சுவாதம் : வி.பா. நிவாத கவச. 15. 3. நன். சூ. 457, மயிலை. மேற்.; 458, வி.