பக்கம் எண் :

3. வஞ்சிப் படலம்

(இ - ள்.) தன்மேலிட்ட மாலையிலே வண்டுகளொலிப்ப மிக்க அறிவினையுடையோர் கீர்த்தியைச் சொல்லக் கத்தரிகையால் மட்டஞ்செய்த மாலையினையுடைய வேந்தன் குடையைப் புறவீடு விட்டது. எ - று.

வ - று. முன்னர் முரசிரங்க மூரிக் கடற்றானைத்
துன்னருந் துப்பிற் றொழுதெழா- மன்னர்
உடைநா ளுலந்தனவா லோதநீர் வேலிக்
குடைநா ளிறைவன் கொள.

(இ - ள்.) தன்முன்னே வீரமுரசு முழங்க, பெரிய கடல்போன்ற சேனையினையும் கிட்டுதற்கரிய வலியினைமுடையராய்ப் பணிந்தெழாத வேந்தர் தம்முடைய வாணாள் கெட்டன; 3திரைமிகுந்த கடலை வேலியாகவுடைய பூமியிடத்து, குடையை அரசன் புறவீடுவிட எ - று.

புறவீடு விட உடைநாளுலந்தனவென்க. ஆல்- அசை

(3)

39. வாணிலை

1செற்றார்மேற் செலவமர்ந்து
கொற்றவா ணாட்கொண்டன்று.

(இ - ள்.) பகைவர்மேல் எடுத்துவிடுதலை விரும்பிய வெற்றியினையுடைய வாளைப் புறவீடு விட்டது. எ - று.

வ - று. அறிந்தவ ராய்ந்தநா ளாழித்தேர் மன்னன்
எறிந்தில கொள்வா ளியக்கம் - அறிந்திகலிப்
பின்பகலே யன்றியும் பேணா ரகநாட்டு
2நண்பகலுங் கூகை நகும்.

(இ - ள்.) சோதிடநூல் வல்லவர் தெரிந்தநாளிலே வட்டக்காலாற் சிறந்த தேரினையுடைய வேந்தன் வெட்டிவிளங்கும் அழகிய வாளினது புறவீடு விடுதலையுணர்ந்து மாறுபட்டு உச்சிக்குப் பின்பன்றியும் பகைவருண்ணாட்டிடத்து உச்சிப்பொழுதும் கோட்டான் பாடாநிற்கும் எ - று.

(4)

40. கொற்றவை நிலை

நீடோளான் வென்றிகொள்கென நிறைமண்டை வலனுயரிக்
கூடாரைப் புறங்காணுங் கொற்றவைநிலை யுரைத்தன்று.

(இ - ள்.) நீண்ட தோளினையுடையவன் வெற்றி பெறுவானாகவெனச் சொல்லி நல்ல பொருள்களால் நிரம்பிய பாத்திரத்தை வெற்றியாகவெடுத்து அரசனுடைய பகைவரை முதுகுபுறங்காணும் துர்க்காதேவி நிலைமையைச் சொல்லியது எ - று.


1. சிலப்.5 : 89-94, அடியார். மேற். 2. புறநா.356 : 2; 362.17-8. (பி-ம்.) 3. 'குளிர்ந்த கடலை'